Advertisement

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவாதத்தில் வங்கி கடன்

சென்னை:தமிழகத்தில் தற்போது, 7,500 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி உட்பட, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னை மற்றும் புறநகரில் உள்ள, 2,000த்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மட்டும், கடந்த ஆண்டு, 12,450 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து உள்ளன.

இந்நிலையில், 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட கன மழையால், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் உள்ள பல தொழில் நிறுவனங்களில் சேதம் ஏற்பட்டு உள்ளது.

அந்நிறுவனங்களுக்கு, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பல ஆண்டுகளாக செயல்படும் சிறு நிறுவனங்கள், இயந்திர தளவாடங்களை காப்பீடு செய்துள்ளன. வெள்ள சேத இழப்பை சமாளிக்க, காப்பீடு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை கிடைக்கும்.

மேலும், நடைமுறை மூலதன செலவுகளுக்கு, வங்கிகளும், நிறுவனங்களின் பண பரிவர்த்தனைக்கு ஏற்ப, 'ஓவர் டிராப்ட்' முன்பணம் வழங்கும்.

அதேசமயம், புதிதாக துவங்கப்பட்ட, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, வங்கிகளில் இருந்து கடன், முன்பணம் கிடைப்பது சிரமம்.

எனவே, குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான தமிழக கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு எளிதில் வங்கி கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, அந்த நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத்தை, அரசு ஏற்று கடன் வழங்க பரிந்துரை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement