Advertisement

அப்போதே சொன்னது திருப்புகழ் கமிட்டி அலட்சியம் காட்டியதால் இப்போது அவலம்

சென்னை பெருநகரில் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு பரிந்துரைகளை அமல்படுத்த, அரசு துறைகள் அலட்சியம் காட்டியதே, தற்போதைய வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னையில், பருவமழை பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான பரிந்துரைகள் வழங்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில், 12 பேர் குழு, 2021ல் அமைக்கப்பட்டது.

ஆண்டுதோறும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து, 2022 மே 10ல், அக்குழு இடைக்கால அறிக்கையை அரசுக்கு அளித்தது.

சென்னை பெருநகரை, ஆரணியாறு - கொசஸ்தலை ஆறு வடிநிலம், அடையாறு - கூவம் வடிநிலம், கோவளம் வடிநிலம் என, மூன்று பாகங்களாக பிரித்து, இக்குழு மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தது.

சென்னை மாநகராட்சியில், கொசஸ்தலையாறு வடிநில பகுதியில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்புகள், கடல் மட்டத்தில் இருந்து, 19 அடி உயரத்தில் அமைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதில் கொண்டு செல்லப்படும் மழை நீர், பிரதான வடிகால் அமைப்புகளுக்குள் எப்படி சேரும் என்பதை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பன்னாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து, அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை, அக்குழு தெரிவித்தது.

அதன் விபரம்:

* கொசஸ்தலையாறு, வடக்கு பஹிங்காம் கால்வாய், மாதவரம் ஏரி உபரி நீர் கால்வாய், அம்பத்துார் ஏரி உபரி நீர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்

* இங்கு ஏற்படும் வெள்ளத்தின் அளவு, மழைநீர் வடிகால்களின் கொள்திறன் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்

* மாதவரம், செங்குன்றம் ஏரிகளின் உபரி நீர் வடிந்து செல்ல, தேவையான புதிய கால்வாய்கள் அமைக்க வேண்டும்; அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக, நீர் வளத்துறையின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

கோவளம் வடிநிலத்தில்...



* ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்கள், கோவளம் வடிநிலத்தில் அமைந்துள்ளன. இங்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பஹிங்காம் கால்வாய், ஒக்கியம்மடுவை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள், வடிகால் அமைப்புடன் இணைக்கப்படாமல் தனித்து விடுப்பட்டுஉள்ளன.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீர்மட்டம் உயர்ந்தால், அருகில் உள்ள பகுதிகளில் சாலையில் நீர் மட்டம் அதிகரிக்கும் நிலை உள்ளது. இங்கு ஒருங்கிணைந்த வடிகால் பணிகளில், மாநகராட்சி நிர்வாகம் நீர்வளத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்

* இங்கு தானியங்கி முறையில் செயல்படும் நீர் வெளியேற்று நிலையங்களை ஏற்படுத்த வேண்டும்

* மதுரப்பாக்கம் ஓடை, ஒட்டியம்பாக்கம், அரசன் கழனி, பெரும்பாக்கம் ஏரிகளில் உபரி நீர் உரிய முறையில் வெளியேற, புதிய கால்வாய்கள் ஏற்படுத்த வேண்டும்

* பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலை, நுாக்கம்பாளையம் சாலை ஆகிய வழித்தடங்களில், மழைநீர் நேரடியாக பஹிங்காம் கால்வாய்க்கு செல்லும் வகையில், புதிய கால்வாய்களை ஏற்படுத்த வேண்டும்

இதில் வீராங்கல் ஓடையில் இருந்து பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வரை, மழைநீர் கால்வாய் அமைத்து, பல்லாவரம் - ரேடியல் சாலை கால்வாயில் இணைக்க வேண்டும்.

மாம்பலம் கால்வாய்



* மாம்பலம் கால்வாயில், 270 இடங்களில் மழைநீர் வந்து சேரும். இதை ஒட்டிய பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை பணிகளை முறையாக செயல்படுத்துவதை, மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்

* மாம்பலம் கால்வாய், நந்தனம் கால்வாய், ரெட்டிகுப்பம் கால்வாய் ஆகிய இடங்களில் முறையான இணைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகள் வழங்கியது.

இந்த பரிந்துரைகளை, மாநகராட்சி உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள், கடந்த ஓராண்டில் அமல்படுத்தி இருந்தால், தற்போதைய வெள்ள பாதிப்பை தவிர்த்து இருக்கலாம்.
- நமது நிருபர் -

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement