Advertisement

பழனிசாமியுடன் நேரடி விவாதத்திற்கு தயார்!

சென்னை:''மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியுடன் விவாதிக்கத் தயார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் டெங்கு, டைபாய்டு, மலேரியா, ப்ளூ உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

எனவே, மழைக்கால காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 1,000 இடங்கள் உட்பட மாநிலம் முழுதும், 3,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன.

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்த முகாமை துவக்கி வைத்த பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள, ஒன்பது மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 'ரூபெல்லா' தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.

இயல்பான அளவை காட்டிலும், 12 மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டை விட, இரண்டு மடங்கு அதிகம். விமர்சனங்கள் செய்வதற்கு முன், அரசு மேற்கொள்ளும் பணிகளை மனசாட்சியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். இரவு, பகல் பாராமல் களப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் மனம் புண்படாதபடி பேச வேண்டும்.

சென்னையில், 4,000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் பணிகளுக்கு, எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை நேரில் அழைத்து சென்று காண்பிக்க தயார்.

அப்படி அரசியல் செய்தாலும், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து யார் கேள்வி கேட்டாலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியாக இருந்தாலும், சீமான் கட்சியினராக இருந்தாலும், அவர்களுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement