Advertisement

இன்று முதல் 15ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை

சென்னை:'தமிழகத்தில் இன்று முதல், 15ம் தேதி வரை, ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன், வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம்.

இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல், 15ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த, 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யலாம்.

நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தென்தமிழகத்தில் அனேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி எஸ்டேட் பகுதியில், 12 செ.மீ., கோவை விமான நிலையத்தில் 11 செ.மீ., ஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம், நீலகிரி மாவட்டம் பந்தலுார் தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் தலா 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தேனி மாவட்டம் மஞ்சளாறு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் தலா 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு, 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement