Advertisement

50வது வந்தே பாரத் ரயில் அடுத்த வாரம் தயாராகும்!

சென்னை:சென்னை ஐ.சி.எப்., ஆலையில், 50வது 'வந்தே பாரத்' ரயில் தயாரிப்பு பணி, அடுத்த வாரத்தில் நிறைவு பெற உள்ளது.

சென்னை ஐ.சி.எப்., ஆலையில், முதல், 'வந்தே பாரத்' ரயில், 2018ம் ஆண்டு, 97 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலின் முதல் சேவை, புதுடில்லி - வாரணாசி இடையே, 2019 பிப்., 15ல் துவங்கியது.

சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாக இருப்பதால், பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே, முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், நாடு முழுதும், 400 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக, 75 'வந்தே பாரத்' விரைவு ரயில்களை இயக்க, ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.

இதுவரை, 49 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, ரயில்வேயிடம் வழங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், 50வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி, அடுத்த வாரத்தில் முடிவடையும் என, ஐ.சி.எப்., அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, சென்னை ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த, 2018ம் ஆண்டுக்கு பின், அடுத்தடுத்து தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

குறிப்பாக, வேகம் அதிகரிப்பு, பயணத்தின் போது அதிர்வு குறைவு, உள்அலங்காரம், ரயில் பெட்டியின் வெளிப்புறத்தில், 'சிசிடிவி கேமரா' உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை செய்துள்ளோம்.

விலங்குகள் மீது மோதும் போது பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, முகப்பில் சில மாற்றங்கள் செய்ய உள்ளோம். 50வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணியை அடுத்த வாரத்தில் முடித்து, ரயில்வேயிடம் ஒப்படைக்க உள்ளோம்.

அடுத்தகட்டமாக, படுக்கை வசதி உடைய வந்தே பாரத் ரயில், பார்சல் ரயில், வந்தே மெட்ரோ, புறநகர் மின்சார வந்தே பாரத் ரயில் என, மேலும் நான்கு புதுவகை ரயில்களை படிப்படியாக தயாரிக்க உள்ளோம்.

அதன்பின், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை உள்நாட்டில் தயாரிக்கும் பணியையும், ஐ.சி.எப்.,யில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement