Advertisement

இந்திய பயணியரை எதிர்பார்க்கும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களில் கவனம்

Tamil News
இலங்கையின் அன்னிய செலாவணி வருமானத்திற்கு பிரதானமாக இருந்தது, அந்நாட்டு சுற்றுலா துறை. கொரோனா தொற்று பரவல் மற்றும் அந்நாட்டில் நிலவிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் காரணமாக, சமீப ஆண்டுகளாக சுற்றுலா துறை பெரும் பின்னடைவை சந்தித்தது.

அதை சீர் செய்யும் முயற்சியில், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த நவம்பர், 30 முதல் டிச., 3ம் தேதி வரை, இலங்கை யாழ்ப்பாணத்தில், 'ஜாப்னா மைஸ் எக்ஸ்போ- 2023' என்ற கண்காட்சி நடத்தப்பட்டது.

இலங்கை சுற்றுலா அமைச்சகத்தின் கீழுள்ள, எஸ்.எல்.சி.பி., என்ற, இலங்கை மாநாட்டு பணியகம் ஏற்பாடு செய்த இக்கண்காட்சியில், இந்தியாவின் தென்மாநிலங்களில் இருந்து, 45 சுற்றுலா முகவர்கள், உள்ளூர் சுற்றுலா முகவர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அப்போது, இந்திய சுற்றுலா முகவர்கள் மற்றும் உள்ளூர் முகவர்கள் இடையே, 2,000த்துக்கும் மேற்பட்ட நேரடி கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

'ஜாப்னா மைஸ் எக்ஸ்போ- 2023' கண்காட்சியை, இலங்கை மாநாட்டு பணியக தலைவர் திசும் ஜெயசூர்யா, பொது மேலாளர் கிரிஷாந்த பெர்னாண்டோ, வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் பத்திநாதன், இலங்கை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை நிறுவன தலைவர் ஷிரந்த பீரிஸ் மற்றும் தென்னிந்திய முன்னணி சுற்றுலா முகவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவர் திசும் ஜெயசூர்யா பேசியதாவது:

இந்தியாவின் தென்மாநில சுற்றுலா முகவர்களிடம் இருந்து பெறப்பட்ட, 1,017 விண்ணப்பங்களில், 45 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அழைக்கப்பட்டனர். இலங்கை வடமாகாண பகுதியான யாழ்ப்பாணம், எப்போதும் எங்களுக்கு மிகவும் சாத்தியமான இடமாக இருந்து வருகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் புலம்பெயர் மக்கள், அவர்களின் மூதாதையரின் சொந்த நிலத்தில், அவர்களின் குடும்பங்கள், நண்பர்கள், சமூகங்களுடன் மீண்டும் இணையக்கூடிய வாய்ப்பை வழங்க விரும்புகிறோம். முதலில், இந்தியாவின் தென் மாநிலங்கள் அளவில் சந்தையை மேம்படுத்துவதில், கவனம் செலுத்த விரும்புகிறோம்.

அதாவது, தென் மாநிலங்களில் துவங்கி, படிப்படியாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லவே, இலங்கை மாநாட்டு பணியகம் விரும்புகிறது.

இலங்கைக்கு அக்டோபர் வரை, 1.5 கோடி சுற்றுலா பயணியர் வந்துள்ளனர். இது, அடுத்தாண்டு, 2.5 கோடியாக உயரும் என, எதிர்பார்க்கிறோம். இந்த எண்ணிக்கை, 2030ல், 5 கோடியாக உயரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இலங்கை மாநாட்டு பணியகத்தின் பொது மேலாளர் கிரிஷாந்த பெர்னாண்டோ பேசியதாவது:

ஒட்டு மொத்தமாக இலங்கைக்கு வருகை தந்தவர்களில் கணிசமானோர், இந்தியாவின் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். எனவே, அவர்களை கருத்தில் கொண்டு, முதலில் சந்தையை வளர்க்க, இலங்கை மாநாட்டு பணியகம் விரும்பியது. அக்டோபர் மாதத்தில், இலங்கைக்கு மொத்தம், 2.28 லட்சம் சுற்றுலா பயணியர் வந்துள்ளனர்.

இதில், 26 சதவீதம் பேர் இந்தியாவையும், அவர்களில், 16 சதவீதம் பேர் தென் மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். எனவே இந்த, 16 சதவீதத்தை கவனத்தில் கொண்டு, அதை மேம்படுத்த விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சி நிறைவு நாளில், தென் மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா முகவர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான, நல்லுார் கந்தசாமி கோவில், யாழ்ப்பாணம் பொது நுாலகம், யாழ்ப்பாணம் கோட்டை போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர்.

தயாராகிறது யாழ்ப்பாணம்!
தென்னிந்திய மைஸ் சங்கத் தலைவர் ஏ.ஆரிப், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி: ஒரு சில தசாப்தங்களுக்கு முன், எப்போதும் தலைப்புச் செய்திகளில் யாழ்ப்பாணம் இடம் பெறும். தற்போது, இங்கு ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதை காண முடிகிறது. தற்போது, யாழ்ப்பாணத்துக்கு தேவையானது அதிக சுற்றுலா பயணியர் வருகை தான். அதற்கு முன், யாழ்ப்பாணம் முழுமையாகத் தயாராக வேண்டும்.
ஒரு சில மாற்றங்களை கட்டாயம் செய்ய வேண்டும். உள்ளூர் பகுதிகளை இணைப்பதில், ஒரு சில சிக்கல்கள் உள்ளன. சுற்றுலா பகுதிகளை சுகாதாரத்துடன் வைப்பது, சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை,சாகசம் மற்றும் நீர் விளையாட்டுகள் போன்றவையும் அவசியம். இயற்கை எழில் கொஞ்சும் அழகு, ஏற்கனவே உள்ளதால், கடற்கரை பகுதிகளை மேம்படுத்த வேண்டும். இந்திய சுற்றுலா பயணியருக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதால், உள்கட்டமைப்பை மேம்படுத்தப்படுவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement