Advertisement

நீதிபதியின் விளக்க மனு பொன்முடிக்கு வழங்க உத்தரவு

சென்னை:சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்ததை, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், வேலுார் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை, பொன்முடிக்கு பதிவுத்துறை வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக, விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிந்தனர். வழக்கானது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 2022 நவ., 7ல் வேலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்த லீலா, இந்தாண்டு ஜூன், 28ல், வழக்கில் இருந்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோரை விடுவித்து தீர்ப்பளித்தார்.

வேலுார் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. வழக்கு விசாரணை, தற்போது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் நடந்து வருகிறது. இந்த வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி வசந்த லீலா, தன் தரப்பு விளக்கத்தை மனுவாக சமர்ப்பித்துள்ளார்.

இந்த விளக்க மனுவின் நகல் கோரி, அமைச்சர் பொன்முடி, அவர் மனைவி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுவை விசாரித்த நீதிபதி, வேலுார் நீதிபதியின் விளக்க மனுவின் நகலை, பொன்முடி தரப்புக்கு வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலுார் நீதிமன்றத்துக்கு மாற்றிய, உயர் நீதிமன்றம் நிர்வாக ரீதியான உத்தரவை வழங்க வேண்டும்; வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என, பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். மேலும், உயர் நீதிமன்றத்தின் நிர்வாக ரீதியிலான உத்தரவை கோரும் மனுவுக்கு, தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும், 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement