Advertisement

நேற்றும் துருக்கி குலுங்கியது: மிரட்டும் பலி எண்ணிக்கை

Tamil News
அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில், 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் 6,000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. இதன் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

மேற்காசிய நாடான துருக்கியின் தென்மேற்கே உள்ள காசியன்டெப்பை மையமாக வைத்து, நேற்று முன்தினம் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து, பல நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதைத் தவிர, 7.5, 6.6 ரிக்டர் அளவுகள் என, நேற்று முன்தினம் மட்டும் நான்கு முறை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெரும் சேதம்



இதனால், துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில், 6,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடித்து தரைமட்டமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் உடனடியாக துவங்கினாலும், கடும் பனி, குளிர், மழையால் இது மெதுவாகவே நடந்து வருகிறது. பெரிய அளவிலான இயந்திரங்கள் இல்லாததால், மீட்பு பணி மந்தமாக நடக்கிறது. சரிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கியுள்ளோரை தேடும் பணி நேற்றும் தொடர்ந்தது. கட்டட இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து பலி எண்ணிக்கை, 5,000ஐ தாண்டியது. துருக்கியில் மட்டும், 3,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், துருக்கியில் நேற்று காலையில், 5.7 ரிக்டர் அளவுக்கு ஐந்தாவது பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதிலும் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. துருக்கியில் மட்டும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக, அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், சில மருத்துவமனைகளும் இடிந்துள்ளன. இதனால், காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடும் குளிர், பனிப்பொழிவு நீடிப்பதால், வீடுகளை இழந்த மக்கள், மசூதிகள், விளையாட்டு அரங்கங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண வசதி



துருக்கியில், 10 மாகாணங்களில், 7,800 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்டாகன், ஏழு நாள் அரசு முறை துக்கத்தை அறிவித்துள்ளார். சிரியாவிலும் நிலைமை மோசமாகவே உள்ளது. குறிப்பாக பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் போதிய நிவாரண வசதிகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தேவையான உதவிகள் அளிப்பதாக அறிவித்துள்ளன. தென் கொரியா உட்பட பல நாடுகள், மீட்புப் படைகளை அனுப்பி வைத்துள்ளன.

நம் அண்டை நாடான பாகிஸ்தானும், 50 பேர் உடைய மீட்புப் படையை அனுப்பி வைத்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தினமும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று துருக்கியின் அங்காராவுக்கு நேரில் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு குழு புறப்பட்டதுதுருக்கி மற்றும் சிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தெரிவித்தார். இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து, 100 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மோப்ப நாய்கள், மருத்துவக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு புதுடில்லியில் இருந்து புறப்பட்டனர். இத்துடன் மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ராணுவ மருத்துவமனை சார்பில், 89 பேர் அடங்கிய மருத்துவக் குழு அனுப்பப்பட உள்ளது. இவர்கள் மருத்துவக் கருவிகளுடன், 30 படுக்கை வசதி உடைய தற்காலிக மருத்துவமனை அமைக்கத் தேவையான பொருட்களுடன் துருக்கிக்கு செல்ல உள்ளனர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    என்ன ஆனாலும் திரு மோடி அவர்கள் செய்வது மனிதனின் மான்பை கூட்டுகிகிறது

    • karupanasamy - chennai,இந்தியா

      பாம்புக்கு பால்வார்த்தாலும் அது நம்மீது விஷத்தை கக்கும் என்பது தெரிததுதான்.

Advertisement