Load Image
Advertisement
dinamalar telegram

கத்தார் தமிழர் முன்னேற்ற சங்க இலக்கிய விழா

கத்தாரில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் சமூக பணிகளை மேற்கொண்டுவரும் தமிழ் அமைப்பான கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கம், கத்தாரில் இந்திய தூதரகத்தின் கீழ் இயங்கும் இந்திய கலாச்சார மையத்தில் உள்ள அசோகா உள்ளரங்கத்தில் ஒரு சிறப்பான இலக்கிய நிகழ்வை நடத்தி தனது உதயத்தை ஒளிபெறச் செய்தது.கலைமாமணி திண்டுக்கல் ஐ லியோனியின் தலைமையில், 'திரைப்படங்கள் மக்களுக்கு வழிகாட்டுகின்றன? வழிமாற்றுகின்றன?' என்னும் தலைப்பில் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. வழிகாட்டுகின்றன என்கிற தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தா, தேவகோட்டை ராஜன் பேசினர். வழிமாற்றுகின்றன என்கிற தலைப்பில் கவிஞர் இனியவன், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோர் பேசினர். இதில் கத்தார் வாழ் இலக்கிய ஆர்வலர்களான அலமேலு கணேசன், மணிகண்டன் கருப்பையா முறையே இரு அணிகளிலும் பேசினர். சிந்தனையை தூண்டி, சிரிக்கவும் வைத்த இந்த நகைச்சுவை பட்டிமன்ற நிகழ்வை தமிழ் மக்கள் பெருந்திரளாக வந்திருந்து கண்டு ரசித்தனர்.

நிகழ்வின் வரவேற்புரையை முத்து அருளாளன் வழங்கினார். கத்தார் மற்றும் இந்திய தேசியகீதம் ஒலிக்க அற்புதமாகத் தொடங்கிய நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சார முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி பெண்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அதைத்தொடர்ந்து கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கத் தலைவர் கௌரி ஷங்கர் தனது தலைமை உரையை வழங்கி, சங்கத்தின் மேலாண்மை குழு நிர்வாகிகளை மேடையில் அறிமுகம் செய்து, அவர்கள் ஒவ்வொருவரையும் வந்திருந்த விருந்தினர் வாயிலாக கௌரவித்து பெருமை படுத்தினார். நிகழ்ச்சியின் அனுசரணையாளர்கள் அனைவரையும் நிகழ்வின் மேடைக்கு அழைத்து அவர்களையும் பாராட்டி விருந்தினர் வழியே சிறப்பு செய்தார் தலைவர் கௌரி ஷங்கர்.

பிறகு பட்டிமன்ற பேச்சாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடந்தது. கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களான பிரேம்குமார், யாழினிக்குமார், ஜெயகாந்தன், தீபன், முத்து அருளாளன், செந்தில்வேல், குமார், துக்கான் குமார், ஷேக் காதர், ராம்பிரசாத், ஆலோசகர்களான துரைசாமி குப்பன் , இஸ்மாயில் நாகூர், ஐ.சி.சி. தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் மோகன்குமார் ஆகியோர் இலக்கியப் பேச்சாளர்களை கௌரவித்து மகிழ்ந்தனர்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற நகைச்சுவை பட்டிமன்ற நிகழ்ச்சியினை தங்கள் இருக்கையை விட்டு நகராமல் சிரித்து ரசித்து கொண்டாடி தமிழ்ப்பெருங்கூட்டம் மகிழ்ந்தது மனதுக்கு பெரும் நிறைவாக இருந்ததாக கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கூறி குதூகலமானார்கள்.
இந்த பெரும் நிகழ்வின் முத்தாய்ப்பாக, கத்தாரில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ் சமூகத்துக்கு பல்வேறு விதத்தில் சேவை செய்துவரும் டாக்டர் துரைசாமி குப்பனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவம் செய்தது கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கம். இந்தியா கலாசார மய்யத்தின் பொதுச்செயலாளர் மோகன்குமார், கத்தார் தமிழர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ ராஜ விஜயன், கலைமாமணி லியோனி, கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பலரும் சேர்ந்து இந்த விருதினை டாக்டர் குப்பனுக்கு வழங்கி பெருமை செய்து மகிழ்ந்தனர்.

இந்த இலக்கிய நிகழ்வை நிர்வாகக்குழு உறுப்பினரான ஜெயகாந்தன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
- நமது செய்தியாளர் எஸ். சிவசங்கர்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement