- நமது செய்தியளர் சரவணன் அழகப்பன்
தாய்லாந்தில் சுமார் 17 க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இருந்தாலும், மிகவும் பழமையான, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் மட்டுமே, தமிழக கோவில்கள் போன்ற தோற்றம் கொண்டதாகவும், தமிழக கோவில்களில் நடைபெறுவது போல, ஐதீக முறைப்படி, ஆகம விதிகளைப் பின்பற்றி அனைத்து பூஜைகளும் நடைபெறும், ஒரே ஆலயமாக திகழ்கிறது.
சனி என்றாலே சனிபகவானை குறிப்பதாகும், சனி பகவானை ஆயுள்காரகன் என்று சொல்வதுண்டு. ஏனெனில், அவரது ஆதிக்கத்தைப் பொறுத்து மனிதனின் ஆயுட்காலம் அமையும் என்று கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வருவது இயல்பு என்றாலும், புரட்டாசியில் வரும் சனிக்கு கூடுதல் சிறப்பு, ஏனென்றால், இது பெருமாளுக்கு உகந்த நாள், அவர் ஒருவர்தான் சனியை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டுள்ளவர் என்பதாலேயே, புரட்டாசி சனிக்கிழமைகளில், திருமால் சன்னதிகளில், திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் வெள்ளமாக திரண்டிருப்பர்.
ஸ்ரீமகாமாரியம்மன் கோவிலில் கடந்த 23/9 புரட்டாசி மாத முதல் சனிக் கிழமை முன்னிட்டு, திருமால் உற்சவர் சிலைக்கு அனைத்து அபிஷேகங்களும் செய்யப்பட்டு, அலங்காரத்திற்குப்பின், கோவிலுக்குள் மூன்று சுற்று ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அன்னத்துக்கும் வேல் பூஜை போடப்பட்டு, வந்திருந்த பக்தர்களில் பெரும்பாலானோருக்கு, சுவையான அன்னதானம், சிறப்பான காய்கறிகளோடு, வடை, பாயாசம், மற்றும் இனிப்புகளும் இணைய, டேபிள் சேரில் அமர்ந்து சாப்பிடுமாறு சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!