புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம். இப்புனித மாதம் உலகை ரட்சித்துக் காத்தருளும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கு - திருவேங்கடமுடையானுக்கு உகந்த மாதம். கிராமங்களிலே இன்றும் பக்தி சிரத்தையோடு வீடு வீடாகச் சென்று “ கோவிந்தா ...கோவிந்தா “ என்று அரிசி வாங்கிப் பெருமாளுக்குப் படைத்து நெய்வேத்தியம் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதைக் காணலாம். பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளதால் வைணவத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவர். அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். மஹா விஷ்ணுக்கு உகந்த மாதமாதலால் பெருமாளை வழிபடுவது மிகச் சிறப்பாகும்.
“ கோவிந்தா ...நாரயணா..வைகுந்த வாசா “ என்றாலே கருணை புரிந்து வாரி வழங்கும் கருணாமூர்த்தி சிங்கப்பூரின் பிரபல வைணவத் தலமான சாங்கி ராமர் ஆலயத்திலே ஸ்ரீ சீதா – லட்சுமண ஹனுமந் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
புரட்டாசி முதல் வார சனிக்கிழமை வழிபாடு 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமையே தொடங்கி பஞ்ச சூக்த ஹோமம் – ஸ்ரீ ராமமூல மந்திர ஹோமத்துடன் திருமஞ்சணம் நடைபெற்றது. சனிக்கிழமை வைகறையில் சுப்ரபாத சேவை – விஸ்வரூபத் திருக்காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து தோமாலா சேலை – விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் – தலைமை அர்ச்சகர் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார் தலைமையில் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது.
பத்து மணிக்கு திருத்தளிகை சமர்ப்பணம் செய்யப்பட்டு மதியம் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டவர்களுக்குத் தலைவாழை இலையில் அறுசுவைப் பிரசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. மாலை எஜமான வரிசை சமர்ப்பணம் செய்து – சகஸ்ரநாம அர்ச்சனையுடன் சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி திருவீதி உலா வந்த காட்சி காணாத கண் என்ன கண்ணே என்றவாறு அமைந்தது.
இரவும் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டோர் அன்னதானத்தில் பங்கேற்றனர். அக்டோபர் ஏழாம் தேதி சீதா கல்யாண மஹோற்சவம் நடைபெற உள்ளது. புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவத்தை ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை அனைவராலும் பாராட்டப்பட்டது.அனைத்து வைபவங்களிலும் பக்தப் பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் திருவருளைப் பெற்றுய்யுமாறு ஆலயம் அழைக்கிறது.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!