அஜ்மான் இந்திய சங்கத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
அஜ்மான் : அஜ்மான் இந்திய சங்கத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம், பள்ளிக்கூட முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு இந்திய சங்க தலைவர் அப்துல் சலா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரூப் சித்து வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய சங்க நிர்வாகக்குழு தலைவர் அல்தாப் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய துணை தூதரக அதிகாரி கே. காளிமுத்து கலந்து கொண்டார். அவர் சிறந்த பள்ளிக்கூட முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது : இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மறைந்த ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்டோர் ஆசிரியப் பணியில் தங்களை அர்ப்பணித்து இந்தியாவின் உயர் பொறுப்பை அடைந்தனர். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களின் சேவையை போற்றுகிறேன் என்றார்.
இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது. அஜ்மான், ஷார்ஜா, உம் அல் குவைன், புஜேரா, ராசல் கைமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த முதல்வர்கள், ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சாயா தேவி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!