இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருக்கோணமலைக்குப் பெயர்கள் பல உள்ளன. ஊர்களின் பெயர்கள் காலப்போக்கில் மாறிவருவது இயற்கையே. கோகண்ணம், திரிகோணமலை, திருக்குன்றாமலை, திருக்கோணமலை, திருக்கோணாதமலை, திருக்கொணாமலை, கோணமலை, கோணாமலை, மச்சேந்திரபாவதம், மச்சேஸ்லரம், தெக்கணகைலாசம், தென்கைலாசம், திருமலை என்பன எம்மூரின் பல பெயர்களாகும்.
பாண்டுவசுதேவன் தனது உறவினர் உடன்சுற்றம் உட்பட முப்பத்திருவருடன் கோகண்ணம் என்ற துறைமுகத்தில் இறங்கியதாக மகாவம்சம் கூறுகின்றது. மகாவம்சத்தின்படி கோகண்ணம் என்ற துறைமுகம் மகாகந்தர என்னும் ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்திருந்தது. மகாகந்தர என்பது சிங்கள மொழியில் பெரிய மலையென்று பொருள்படுகின்றது.
ஈழநாட்டிலுள்ள ஆறுகளில் மிகவும் உயரத்தில் உதிக்கும் ஆறு மகாவலிகங்கையாகும். இலங்கைப்பல்கலைக்கழகத்தின் புதைபொருள் ஆராய்ச்சித்துறைத்தலைவர் கலாநிதி எஸ். பறணவித்தான மகாகந்தர என அழைக்கப்பட்ட ஆறு இன்றுள்ள மகாவலி கங்கையாகும் என்று கூறுகின்றார். மகாவலிகங்கை திருக்கோணமலைக் குடாக்கடலில் கலக்கின்றது. ஆகவே கோகண்ணம் என்று மகாவம்சத்தில் கூறுந் துறைமுகம் இன்றுள்ள திருக்கோணமலைத் துறைமுகமாகும் என்பது கலாநிதி எஸ். பரணவித்தானாவின் கருத்தாகும்.
இலங்கையின் வரலாற்று இதழில் பி. ஜி. பெரரா என்பவர் திருக்கோணமலை என்ற பெயரின் தோற்றத்தைப் பின்வருமாறு விளக்குகின்றார். . The name Trincomalee consists of three different words: Thiru Malai in Tamil meaning holy and hill respectively
இந்து சாதனத்தில் இளைப்பாறிய கல்வியதிகாரி எஸ்.ஜே.குணசேகரம் திருக்கோணமலையின் பெயர் சிங்கள மொழியுடன் தொடர்புடையது என்பதை மறுக்கு முகமாக இந்தியாவில் வழங்கும் கோகர்ணம் என்னும் தலத்தை ஆதாரமாகக் காட்டுகின்றார். தமிழில் கோன் என்பது அரசன், ஈசன் என்று பொருள்படும். ஆகவே திருக்கோணமலை யென்பது தெய்வீகத்தன்மை வாய்ந்த மலை என்பது அவர்கள் கருத்தாகும் (கோகர்ணம் என்று துளுவநாட்டில் ஒரு சிவன் கோவிலிருக்கின்றது. கோகர்ணேசுவரம் என்பது திருவாவடுதுறையிலுள்ள ஒரு சிவன் கோயில்).
ஆனந்த விகடன் தமிழ் அகராதியில் இவ்வூரின் பெயர் திரிகோணமலை என்றும், திருக்குன்றாமலை என்றும், திருக்கோணமலை என்றும் கோணமலை என்றும், கோணாமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்கோணமலை என்பதற்கு ஈழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.
தெக்ஷ்ண கைலாசம் என்று ஸ்கந்தபுராணமும், தென் கைலாயம் என்று தமிழ்ப்புரானங்களும் கூறுகின்றன. கைலாசத்திலிருந்து வாயுபகவானாற் பெயர்த்தெறியப்பட்ட மூன்று சிகரங்கள் வீழ்ந்த இடங்களும் தென்கைலாயம் என்று கூறுப்படுகின்றன. கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோணமலைப் பதிகத்தில் பாடல் தோறும் கோணமாமலை அமர்ந்தாரே என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே திருஞானசம்பந்தர் காலத்தில் இவ்வூரின் பெயர் கோணமாமலையென்றோ அல்லது திரு என்று அடை கொடுத்துத் திருக்கோனமன்றோ வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரிய புராணத்தில் அழிபுடைசூழத்தொலிக்கும்ஈழத்தன்னில்மன்றுதிருக்கோளிமலை என்றும், திருக்கோணமலை மகிழ்ந்த செங்கண் மழவிடையார் என்றுங் கூறியுள்ளார். சேக்கிழார் காலத்தில் இவ்வூர் திருக்கோனமலையென்றே அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. கி. பி. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதிச் சிவாச்சாரியார் சிவநாமக் கலிவெண்பாவில் திருக்கோணமாமலையென்று கூறியுள்ளார்.
கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் திருக்கொணாமலையென்று இவ்வூரினைக் கூறியுள்ளார். கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வெளிவந்த மச்சபுராணத்தில் மச்சேந்திர பர்வதம் என்றும், மச்சேஸ்வரம் என்றும் இவ்வூருக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது.
கி.பி. 1940 ஆண்டு வெளிவந்த திருக்கோணமலை வரலாறு என்னும் நூலில்எம்மூரின் இயற்கையான பெயர் திருக்கோணாதமலையென்றும், திரிக்கோமலையென்றும், திருக்கோணமலையென்றும் பழைய வழக்கில் உள்ளதென்றும் அவர் கூறியுள்ளார். அண்மைக் காலத்தில் உருவாகிய பெயரைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
இன்று எம்மூரின் பெயர் றீங்கோமலி (TRINCOMALEE) என்று வழங்கப்பட்டு வருகின்றது. திருக்கோணமலை நீதிமன்றத்திலுள்ள பழைய சுவடிகளில் திருக்கொணாதமலையென்றும், திருக்கோணாதமலையென்றும் எம்மூரின் பெயர் காணப்படுகின்றது. 1956ம் ஆண்டு திருக்கோணமலையில் நடந்த தமிழரசுக்கட்சி மாநாட்டை செய்தித்தாள்கள் திருமலை மாநாடு என்று எழுதி வந்ததால், திருக்கோணமலை க்குத் திருமலை என்ற பெயரும் வழக்கில் வரலாயிற்று.
திருக்கோணாதமலை என்பதே எம்மூரின் இயற்கையான பெயரெனக் கொள்ளலாம். திருக்கோணாதமலையென்பது எக் காலத்தும் செல்வம் குறையாதமலையென்ற பொருளைத்தரும். திருக்குன்றாமலையென்றாலும் அப்பொருளையே தருகின்றது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் திருக்கோணமலையென்ற பெயரே இன்று நிலைபெற்றுள்ளது.
- நமது செய்தியாளர் ஞானகுணாளன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!