Load Image
Advertisement
dinamalar telegram

'அநுராதபுர மண்ணில் ஆனைமுகன் தேவஸ்தானம்'

திருகோணமலை நகரிலிருந்து 75 கி.மீ., தொலைவிலும், ஹொரவப்பொத்தானை பகுதியிலிருந்து சுமார் 25 கி.மீ., தொலைவிலும் உள்ள அநுராதபுரத்தின் பசுமை மறையாத ரத்மல்ககவெவ எனும் அழகிய கிராமத்திலுள்ள மாணிக்கப் பிள்ளையார் தேவஸ்தானத்தில் ஆவணிச் சதுர்த்தியை முன்னிட்டு விசேட வழிபாடு மற்றும் பூஜைகள் இடம்பெற்றன. இதில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள் பெருந்திரளானோரும், பௌத்த மதகுருமார், கிராம சேவகர் என பலரும் கலந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.எழுபதுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்தே அங்கே வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்க்குடிகளால் முற்பட்ட காலங்களில் மரத்தடி விநாயகராக சிறு கொட்டிலில் வைத்து வழிபடப்பட்ட எம்பெருமானுடைய ஆலயமானது 1995 இல் ஒருமுறை புனர்நிர்மாணிக்கப்பட்டதோடு அதற்குப்பின்னர் 2010 ற்கு பிற்பட்ட காலப்பகுதியில் குடும்பத்தவர்களின் அயராத முயற்சியால் புனர்நிர்மாணிக்கப்பட்டு தற்போதைய இத்தோற்றம் பெற்றது. இற்றை வரைக்கும் வருடாந்தோறும் ஆவணிச்சதுர்த்தியானது அவல், கடலை, மோதகம், வடை, பொங்கல் முதலிய சகல நைவேத்தியங்களோடு வெகுவிமர்சையாக ஆனைமுகனார் மனங்குளிர அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.இப்பிரதேசத்தை பொறுத்தவரை 1977 கலவரத்துக்கு முன்னதாக ஏராளமான தமிழ் மக்கள் அநுராதபுரத்தின் ரத்மல்ககவெவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்ததாகவும் அத்துடன் அக்காலப் பகுதியில் பெரும் வர்த்தகர்களாகவும் தமிழர்களே இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் பெரும் முதலாளிகளாகவும், வயல் நிலங்கள், கடைகள் என ஏராள சொத்துக்களுக்கு உரித்துடையவர்களாகவும் இருந்த தமிழ்க்குடிகள் தமது வழிபாட்டினை இவ் ஆலயத்திலேயே மேற்கொண்டு வந்துள்ளனர். 77 கலவரத்துக்கு பின்னர் தமிழர்களுடைய நில, புலன்கள் சூறையாடப்பட்டு, கடைகள் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டு அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டனர்.இதுமட்டுமன்றி ரத்மல்ககவெவ பிரதேசத்தில் தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவிலே வாழ்ந்தமைக்கு சான்றாக தமிழ் மன்னன் எல்லாளனுடைய கல்வெட்டுக்களும் இக்கோவில் அமைந்துள்ள பகுதியிலிருந்து சற்றுத் தொலைவில் காணப்படுகின்றன. எல்லாள மன்னன் தனது குதிரைகளுக்கு தீனி போடுவதற்காக ரத்மல்ககவெவ பிரதேசத்திலுள்ள வயல் நிலங்களை பயன்படுத்தியுள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் இப்பிரதேசத்தின் வளத்தினையும் செழிப்பினையும் பறைசாற்றுகின்றன.இன்று எம்மால் தனிச் சிங்களப் பிரதேசமாக நோக்கப்படுகின்ற அநுராதபுரத்தில் இன்னமும் பண்பாடு மாறாத ஒரு சைவத்தமிழ்க் கோவில் என்பது நாம் நிச்சயமாக பேணிக்காக்க வேண்டிய பொக்கிஷம் தான்.- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement