துபாய் : துபாய் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி. 50 வயதுக்கும் மேற்பட்ட இவர் துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் பல ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தவர். ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் அடுத்த வாரம் நடக்கும் சர்வதேச மாரத்தான் போட்டியில் பங்கேற்க துபாய் நகரில் இருந்து சென்றுள்ளார்.
உலகில் நடைபெறும் ஆறு முக்கிய மாரத்தான்களில் ஒன்று பெர்லின் மாரத்தான் ஆகும். மற்ற மாரத்தான்கள் சிகாகோ, ஜப்பான், லண்டன், நியூயார்க், போஸ்டன் ஆகும். இவர் ஏற்கனவே சிகாகோ மாரத்தானில் பங்கேற்றுள்ளார். அடுத்த ஆண்டு நியூயார்க் மற்றும் போஸ்டன் ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது பெர்லினில் நடக்கும் போட்டியில் அறுபதாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க இருக்கின்றனர். அந்த போட்டியில் தனக்கு பங்கேற்க அனுமதி கிடைத்துள்ளது மிகவும் சிறப்புக்குரியது ஆகும் என்றார். அமீரகத்தில் இருந்து பங்கேற்கும் ஒரே தமிழர் என்பதுடன் மட்டுமல்லாமல், உலக அளவில் பங்கேற்கும் ஒரு சில தமிழர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்லின் சென்ற செய்யது அலிக்கு அமீரக தமிழர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!