Load Image
Advertisement
dinamalar telegram

மரண ரயில்வேயில் இறந்த தமிழர்களுக்கு தாய்லாந்தில் நினைவுச்சின்னம்

இரண்டாம் உலகப் போர் காலத்தில், தாய்லாந்து மற்றும் பர்மா இடையே மரண இரயில்வேயில் வேலை செய்ய, ஜப்பானிய படைகளால் பணிக்கப்பட்ட 300,000 ஆசிய கட்டாய தொழிலாளர்களில், கிட்டத்தட்ட பாதி பேர் நோய், பட்டினி, அதிக வேலை, சுகாதாரமின்மை, அடிப்படை மருந்துகள் இல்லாமை, போன்றவற்றால் இறந்ததாக நம்பப்படுகிறது. இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் மலாயாவின் ரப்பர் தோட்டங்களில் இருந்து பணிக்கப்பட்ட தமிழர்களாக இருந்தனர், இருப்பினும் மலாய்க்காரர்களும் கணிசமான எண்ணிக்கையிலும் மற்றும் குறைவான சீனர்கள் மற்றும் பிற நாட்டவர்களும் அடங்குவர்.

அவ்வாறு இறந்தவர்களின் அனைத்து உடல்களும், காஞ்சனாபுரியின் பல பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்தது, அதில் பல நாட்டவர்களுக்கு அடையாள சின்னங்கள் இருக்க அவர்கள் ஒவ்வொரு வருடமும் போர் வீரர்கள் தினம் அனுசரித்து, நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், லட்சக்கணக்கான தமிழர்கள் இறந்தது மண்ணோடு மண்ணாக கொத்து கொத்தாக , புதைக்கப் பட்டிருக்க, அவர்களுடைய தியாகத்தை நினைவு கூறும் வகையில் எந்த விதமான அடையாளச் சின்னங்கள் இல்லாதது, மூதாதையர்களை இழந்த தமிழர் வா‌ரிசுகளின் நீண்ட நாள் கவலையாக இருந்தது.

அதனை தீர்க்கும் வகையில், DRIG (Death Railway Intresting Group) ன் தலைவர் சந்திரசேகரன் பொன்னுசாமி, KTBA(காஞ்சனாபுரி Tourist business association) ன் இணைந்து ஒரு வெகுஜன புதைகுழியை அடையாளம் கண்டு, அதன் மீது ஏற்கனவே புத்த மதத்தினரால் எழுப்பப்பட்டிருந்த ஒரு நினைவுச்சின்னத்தை மேலும் புதுப்பிப்பதற்காக அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, மேலும் பலரிடம் நிதி உதவிகள் பெற்று நிறுவியுள்ளார்.

அதன் மீது, தமிழர்கள் தியாகத்தை தமிழ் எழுத்துக்களில் பொறித்து, 3/6/23 சனிக்கிழமை அன்று காஞ்சனாபுரி துணை ஆளுநரால் திறந்து வைத்து மரியாதை செய்யப் பட்டது, ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டளர்.

இது பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த கொடூரங்களுக்கு ஒரு சான்றாக பல காலத்திற்கு நிற்கும். தொடக்க விழாவில் போரில் உயிர் பிழைத்து இன்றும் உயிர் வாழும் 83 வயது ஆகும் ஆறுமுகம் கந்தசாமி மலேசியாவில் இருந்து வந்து கலந்து கொண்டது உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வாக இருந்தது. மேலும் இறந்தவர்களின் உறவினர்கள் சுமார் 30 பேர் மலேசியாவில் இருந்து வந்து கலந்து கொண்டனர். தாய்லாந்துக்கான மலேசியத் தூதரகத்தில் இருந்து தூதரகத் துணை அதிகாரி, ஆர்ய சமாஜ், ஹிந்து சுயம் சேவக் சங்கம், தாய் பாரத் கல்சுரல் லாட்ஜ், நேதாஜி சுபாஷ் விஷன் மற்றும் தாய்லாந்து வாழ் மக்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, போரில் இறந்தவர்கள் எவ்வித சடங்குகளும் செய்யப்படாமல் புதையுண்டதால், அவர்கள் அனைவருக்கும் காஞ்சனாபுரி ஆற்றங்கரையில் தமிழ் வைதீக முறைப்படி பண்டிதர்களை கொண்டு திதி கொடுத்து அவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.

மேலும் DRIG யின் தலைவர் சந்திர சேகரனுக்கு, இந்தப் பணி சம்பந்தமாக ஆரம்ப காலங்களில், 2014 முதல் 2018 வரை, தாய்லாந்து தமிழ் சங்கம் சார்பாக ஒத்துழைப்பு நல்கப்பட்டது. அப்போதைய TTS தலைவர் தேவதாஸ் மற்றும் தாய்லாந்து வாழ் மலேசிய தமிழர் Dr..சில்வகுமார், பலமுறை இது சம்பந்தமாக, காஞ்சனாபுரி சென்று வந்து, பின்புலத்தில் பக்கபலமாக இருந்துள்ளனர். மேலும் இவர்கள் சார்பாக மரண ரயில்வேயில் பிழைத்து உயிரோடிருக்கும் குடும்பத்தினர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பாங்காக் நகரில் விருந்தளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement