2023 புலம்பெயர் தமிழ்க் கல்வி மாநாடு, உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில், வளைகுடா பகுதிகளில் உள்ள தமிழ் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் தமிழ் பண்பாட்டை விளக்கும் வண்ணம் பல்வேறு விழுமியங்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.
காட்சிப்படுத்திய விழுமியங்களில் 80 சதவீதம் தமிழ்ப் பள்ளி மாணவர்களால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சோழர் வரலாறு, மகாபலிபுரம் தஞ்சை கோயில்கள், பொங்கல் விழாக்கள், பாரம்பரிய சமையல் பொருட்கள், கோலம் போடும் கலை, கீழடி அகழ்வாராய்ச்சி என்று பல்வேறு தமிழக விழுமியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
முன்னதாக, கண்காட்சியை எழுத்தாளர் மாலன், பிரி மாண்ட் பகுதியின் முன்னாள் துணை நகர மன்ற தலைவர் அனு நடராஜன், மாவட்ட இயக்குனர் அனுராக் பால் திறந்து வைத்தனர்.
கண்காட்சி திறப்பு விழாவில் மாநிலத்தின் சார்பில், அனுராக் பால் உலகத் தமிழ் கல்விக் கழகத்திற்கு, பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
கண்காட்சி தளத்தில் தமிழ்ப் பாரம்பரிய கருவிகளான பறையும் கொம்புகளும் மேலும் பல கருவிகளையும் வைத்து, அவற்றை வாசிக்கவும் கற்றுத் தந்தனர். சிலம்பத்தை சுற்றவும் கற்றுக் கொடுத்தனர்.
அதே வேளையில் 300க்கும் மேற்பட்ட வளைகுடா பகுதியில் இருக்கும் 8 தமிழ் பள்ளியின் மாணவ மாணவியர் காலை முதல் மாலை வரை நடந்த இரண்டு நாட்கள் பல் சுவை நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். 2023 புலம்பெயர்ந்த தமிழர் கல்வி மாநாட்டிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களும், பல்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளும் பெற்றோர்களும் என்று 1000 க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
கண்காட்சியை சுபா ராஜேஷ் தலைமையில், மைதிலி பிரபா, சங்கரி ஆகியோர் இணைந்து பணி செய்து அமைத்திருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!