துபாய் : துபாய் நகரின் ஊத் மேத்தா பகுதியில் உள்ளது இந்திய பள்ளிக்கூடம். இந்த பள்ளிக்கூடத்தின் ஷேக் ராஷித் அரங்கில் அமீரகத்தில் கர்நாடக இசையை பயிற்றுவிக்கும் மோஹனா குழுவினரின் குருவந்தனம் நிகழ்ச்சி வெகு சிறப்புடன் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து கர்நாடக இசைக் கலைஞர்கள் சங்கீத கலாநிதி டாக்டர் சவுமியா, வயலின் வித்வான் கலைமாமணி எம்பார் கண்ணன், மிருதங்க வித்வான் நெய்வேலி நாராயணன் மூவரும் இணைந்து கச்சேரி வழங்கி ரசிகர்களை இசை வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 308 இசைப் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர் ஒரே மேடையில் பச்சை வண்ண உடையணிந்து, இந்திய தேசியக் கவி எனப் போற்றப்படும் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 17 பாடல்களை பாடியது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. அமீரகத்தில் பாரதியாரின் பாடல்களை இசையுடன் வழங்கியது பலரது வரவேற்பையும் பெற்றது.
கொரோனா பாதிப்பின் காரணமாக 3 வருடங்களாக தடைப்பட்டிருந்த நிகழ்ச்சியை ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ எனும் கருத்தாக்கத்தில், கனவை நனவாக்கினர். ராதிகா ஆனந்த் அவர்களின் மேற்பார்வையில், 20 க்கும் மேற்பட்ட இசை ஆசிரியர்கள், தீபா வினய், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோரது ஒருங்கிணைப்பில் சிறப்புடன் இசை நிகழ்ச்சியை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புடன் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று பகுதிகள் ஜனவரி மாதம் பாரதியார் மிகவும் விரும்பிய ஜதி பல்லக்கில், துபாயில் சிறு வீதி உலா வந்ததும், அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் இரு நிகழ்வுகளாக பாரதியாரின் வாழ்க்கையையும், அவரது படைப்புகளையும் பேச்சு, பாடல், நடனம், நாட்டியம், நாடகம், என அவரை கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
அமீரக இசை ரசிகர்களின் பேரன்பும், அணுசரணையாளர்களின் ஆதரவும், தன்னார்வலர் குழுவின் தன்னலமில்லா உழைப்புமே இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தது என குழு உறுப்பினர் ரமா மலர் தெரிவித்தார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!