ஜெர்மனியின் பிராங்பேர்ட் மாநகரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, கலை விழா நிகழ்ச்சியை பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் வெகு விமரிசையாக கொண்டாடியது. இவ்விழாவில் பிராங்பேர்ட்டின் இந்திய தூதரக அதிகாரி டாக்டர் அமித் தெலாங் அவர்கள் தலைமை வகித்து சிறப்பித்தார். பிராங்பேர்ட் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் சசிகுமார் உதயகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைவர் சக்திவேல் சுப்ரமணியன், துணைத்தலைவர் பாலாஜி பாலு ஹரிதாஸ், பொருளாளர் கிரிதர் சுப்ரமணியன், பொதுச்செயலாளர் கண்ணன் ஆதிசேஷன், கலைத்துறை செயலாளர் சத்தியதாசன் பாலசுப்ரமணியன், விளையாட்டுத்துறை செயலாளர் பிரவீன் பிஷாராம் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சொர்ணமாலதி சுதாகர், திவ்யா ஆர்யன் ராமன், சுதா பாலசந்தர், சசிகுமார் உதயகுமார், பிரெஷ்னேவ் ஜீவானந்தம், வெங்கிடகிருஷ்ணன் வெங்கட்ராமன், ஸ்ரீதர் ஷண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை வெகு சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
600 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியை சொர்ணமாலதி சுதாகர், சரண்யா கிருஷ்ணமூர்த்தி, நாககுமார் கங்கேஸ்வரன், தாரிணி பழனி ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தமிழ்நாட்டின் பாரம்பரியக்கலைகளான சிலம்பாட்டம், பறையாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், கும்மி, காவடி, வில்லுப்பாட்டு, இசை மீட்டல், பாடல்கள் அனைத்தையும் கண்கவரும் வகையில் அரங்கேற்றினர்.
மேலும், கோ.சௌந்தி என்ற கோ.சௌந்திரராஜுவின் முதல் ஹைக்கூ கவிதை தொகுப்பான 'மழை நேரம்' வெளியிடப்பட்டது. இந்நூலை நாடகத்தென்றல் புகழ் பா.தியான் வெளியிட கோ.சௌந்திரராஜுவின் துணைவியார் விஜி பெற்றுக்கொண்டார். நிறைவாக, பிராங்பேர்ட் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பிரெஷ்னேவ் ஜீவானந்தம் நன்றியுரை ஆற்றினார்.
- தினமலர் வாசகர் பாலாஜி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!