சிங்கப்பூர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி யாகம்
சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் அருளாட்சி புரிந்து காத்தருளும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் மார்ச் 29 புதன்கிழமை சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 3.36 மணிக்கு ஸ்ரீ சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பிரவேசிப்பதை முன்னிட்டு சிறப்பு காயத்ரீ மந்த்ர ஹோமம் – பரிஹார சாந்தி ஹோமம் – சகஸ்ரநாம அர்ச்சனை முதலியவை கோலாகலமாக நடைபெற்றன.
காலை 8.30 மணிக்கு சங்கல்பம் – விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்வு தொடங்கியது. 9 மணிக்கு கலச பூஜை – காயத்ரீ மந்த்ர ஹோமம் தொடர்ந்தது. 9.30 மணிக்கு பூர்ணாஹீதி – தீபாராதனை நடைபெற பத்து மணிக்கு நவக்கிரக தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் – ஏராளமான பக்தப் பெருமக்கள் நேர்த்திக் கடன் செலுத்திய பால் குட அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. தொடர்ந்து பதினெண் வகையான வாசனாதித் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கலசாபிஷேகம் கோலாகலமாக இடம் பெற்றது.
11.15 மணிக்கு மகா தீபாராதனை – பங்கேற்ற பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த சனிப் பெயர்ச்சியின் காரணமாக மேஷம் – ரிஷபம் – மிதுனம் – கன்னி – துலாம் – தனுசு ராசி நேயர்கள் நற்பலன்களை அமோகமாகப் பெறுவர். கடகம் – சிம்மம் – விருச்சிகம் – மகரம் – கும்பம் – மீன ராசி நேயர்கள் பரிஹார பூஜை செய்து கொள்ள வேண்டும். ஆலய நிர்வாகம் வழிபாட்டிற்கும் – பரிஹார பூஜைக்கும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!