நைஜீரியாவில் 'தமிழர் திருநாள்' திருவிழா
தமிழ் சங்கம் நைஜீரியா தைத்திருநாளை மிகவும் உற்சாகத்துடன் ஏற்பாடு செய்திருந்தனர். நைஜீரியாவின் தலைநகரமான அபுஜாவில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து வந்திருந்த உயர் ஆணையர் ஜி பாலசுப்பிரமணியன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். மேலும் லேகோஸில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இருந்து ஆணையர்கள் சந்திரமௌலி குமார் கேர்ன் மற்றும் இரண்டாம் ஆணையர் அஜய் குமார் ஷர்மா தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.லேகோஸ் இலுபேஜுவில் உள்ள சமூக பூங்காவில் காலை 10 மணி அளவில் துவங்கி இந்த விழா, மண் மணம் மாறாத கிராமிய நிகழ்ச்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. ஒருபுறம் மண் பானைகளில் பொங்கல் வைத்தல், கோலப்போட்டி என்று பெண்கள் தங்கள் சொந்த ஊருக்கே சென்ற நினைவுகளில் பூரித்தனர். முளைப்பாரி வளர்த்து அதை சுற்றி கும்மி அடித்து கொண்டாடினர்.மறுபுறம் கடந்த இரு வார காலமாக பயிற்சி எடுத்துக் கொண்ட சிறுவர், சிறுமியர் கோலாட்டம், ஒயிலாட்டம், கரகம், காவடி போன்ற கிராமிய நடனங்களை இங்கே பிரமாதமாக வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், கோழி பிடித்தல் போன்ற விளையாட்டுக்களை சிறுவர்களும், ஆடவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நைஜீரியா தமிழ் சங்கத்தின் தமிழர் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளை இந்த விளையாட்டுக்களில் பொதுமக்கள் கலந்து கொள்வதன் மூலம் வெகுவாக ஆதரித்தனர். நிகழ்வுகளுக்கு இடையில் நீர் மோர், பானகம், கம்பங்கூழ் போன்ற பானங்களும் கொடுக்கப்பட்டது. மதிய உணவும் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் ஒரு தமிழக கிராம திருவிழாவில் கலந்து கொண்ட மனநிறைவோடு சென்றனர் என்றால் அது மிகையாகாது.- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா அனந்தன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!