Load Image
dinamalar telegram
Advertisement

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை கோலாகலம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த தெய்விக மாதம். தென் கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேய சுவாமியும் ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியும் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் வெள்ளிக்கிழமை மாலையே புண்யாகவாசகம் – பஞ்ச சூக்த ஹோமம் – மூல மந்திர ஹோமம் முதலியவற்றுடன் வெகு விமரிசையாகத் தொடங்கி பக்தப் பெருமக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

சனிக்கிழமை வைகறையிலேயே சுப்ரபாதம் ஒலிக்க – தோமாலை சேவையுடன் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்குத் திருத்தளிகை சமர்க்கப்பட்டு தெய்விக சூழல் உருவாகியது. மாலையில் சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கருட சேவையில் எழுந்தருளியது பக்தப் பெருமக்களை மெய்சிலிர்க்க வைத்தது. பெருந் திரளான பக்தர்கள் ராம நாமத்தை வாயாரப் போற்றி மனமார வழிபட்டது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இன்றைய முத்தாய்ப்பு நிகழ்வாக 86 வயது நிரம்பிய நமது உபயதாரர் தொடர்ந்து 50 ஆண்டுகள் உபய சேவை ஆற்றித் தமது பொன்விழா உபயமாக 50 பவுனில் கட்டப்பட்ட சாலிகிராமம் மாலை சமர்ப்பித்தது அனைவரையும் சந்தோஷ சாகரத்தில் ஆழ்த்தியது. சிங்கப்பூரிலேயே முதன்முதலாக இத்தகு நிகழ்வு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்குச் சமர்ப்பிப்பது வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த செய்தியாகக் குறிப்பிடத் தகுந்ததாகும். இது ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.

சாலிக்கிராம மகிமையைப் பற்றித் தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் கூறுகையில் – நேபாளத்திலுள்ள கண்ணகி நதி பற்றி எடுத்துரைத்தார். சாப விமோசனத்தால் - தவ மகிமையால் கல்லானவள் நதியான செய்தியைக் கேட்கும் போது பக்தர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. ஆலய நிர்வாகக் குழுத்தலைவர் விவேகானந்தரும் செயலாளர் விஜயேந்திரனும் உபயதாரரின் உபயப் பொன் விழாச் சமர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டு பாராட்டி – வாழ்த்தி ஆலயம் சார்பாக வெள்ளி ராமர் விக்கிரகத்தை அன்புப் பரிசாக அளித்தனர்.

இக்கண்கொள்ளாக் காட்சியைக் காண அருள் மழையோடு இயற்கை மழையும் பொழிந்த போதும் பக்தர்கள் ஆடாது அசையாது கலையாது நின்று அருட் பிரசாதத்தையும் அறுசுவைப் பிரசாதத்தையும் பெற்று ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் பரிபூரண அனுக்கிரகத்தைப் பெற்றுச் சென்றனர். ஆலய நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

- நமது சிங்கப்பூர் செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement