Load Image
Advertisement
dinamalar telegram

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அமெரிக்க நாட்டின் மசாசூசெட்ஸ் மாகாணம், மிடில்செக்ஸ் கவுண்டி, ஆஷ்லேண்ட் நகரம், எண். 117 வேவர்லி தெருவில் அருள்மிகு இலட்சுமி திருக்கோவில் அமைத்துள்ளது. இந்த கோவிலுக்கு நியூ இங்கிலாந்து இந்து கோவில், என்று வேறொரு பெயரும் உள்ளது. வடகிழக்கு அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில் இதுவே ஆகும்.

ஆலய அமைப்பில் ஆகமத்தின் பங்கு வைணவத்தில் பஞ்சராத்ரம் மற்றும் வைகானசம் என்று இரண்டு ஆகம முறைகள் உள்ளன. ஒவ்வொரு ஆகமத்திலும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு பிரிவுகள் (பாதங்கள்) உள்ளன. கிரிய பாதம், கோவில் கட்டமைப்பு, தெய்வ சிலை அமைப்பு, மற்றும் வழிபாட்டு முறைகளுக்கான விதிகளைக் கொண்டுள்ளன. அமெரிக்க நாட்டில் சில கோவில்களே ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆஷ்லேண்ட் அருள்மிகு இலட்சுமி கோவில் வைகானச ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில், திருமலை - திருப்பதி; ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை போன்ற கோவில்கள் வைகானச ஆகம முறையினை பின்பற்றுகின்றன.

புகழ் பெற்ற சிற்பியும், கோவில் கட்டடக் கலைஞருமான பத்மபூஷன் வை.கணபதி ஸ்தபதி, வாஸ்து மற்றும் ஆகம விதிகளின்படி இக்கோவிலுக்கான வடிவமைத்துக் கட்டியுள்ளார். வழிபாட்டு முறைகளும் இவ்விதிகளின்படி நடைபெறுவது சிறப்பு. ஆலய அமைப்பு ஐந்து நிலைகளும் கொண்ட இராஜகோபுரம் அமைந்த கோவில்கள் அமெரிக்க நாட்டில் அரிது. கிழக்கு நோக்கி அமைந்த ஸ்ரீ லட்சுமி கோவிலில், ஏழு கலசங்களும்டனும் அழகிய சுதை வேலைப்பாடுகளுடனும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் ஐந்து நிலை இராஜகோபுரத்தைக் கண்டு வியந்து போனோம். உயரமான சுற்று மதில்கள். இராஜகோபுரத்தின் வழியாக செல்லும் கதவு மூடியிருந்தது. வேறு ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. கோவிலின் வலப்பக்கம் உள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றோம். அங்கிருந்த பாதுகாப்பு அறையில் காலணிகள் மற்றும் கோட்டு போன்றவற்றை விட்டுவிட்டு உள்ளே சென்றோம். நீண்ட கூடத்தைக் கடந்து கோவில் மகாமண்டபத்தின் உள்ளே சென்றோம்.

மகாமண்டபத்திற்கு வெளியே கொடிமரமும் (துவஜஸ்தம்பமும்) பலிபீடமும் உள்ளன. விசாலமான மகாமண்டபம். மகாமண்டபத்தின் மேற்கில், மூன்று கிழக்கு நோக்கிய சன்னதிகள் உள்ளன. செங்கற் கட்டுமானத்தில் சன்னதிகளின் அஷ்டாங்க விமானங்கள், அதிட்டானம், பிட்டி (சுவர்), பிரஸ்தரம், கிரீவம், சிகரம் மற்றும் கலசம் ஆகிய ஆறு அங்கங்களைக் கொண்டுள்ளது. கருவறை முகமண்டபம் ஆகிய அமைப்பினைக் கொண்டுள்ளன.

மூன்று கருவறைகளையும் சுற்றிவர தனித்தனியே திருச்சுற்றுப் பாதைகள் உள்ளன. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் இருந்தது. மையக் கருவறையில் மூலவராக, நான்கு கரங்களுடன், பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில், அருள்மிகு இலட்சுமி அருள்பாலிக்கிறார். மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியுள்ளன. வலது கரம் அபய முத்திரையையும், இடது கரம் அபய முத்திரையையும் காட்டுகின்றன. இக்கோவிலில் தாயரே மூலவர். அமெரிக்க நாடு தங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்ததாக இக்கோவிலின் நிர்வாகிகள் நம்பியதால் செழுமையின் தெய்வமாகக் கருதப்படும் இலட்சுமி, இக்கோவிலின் மூலவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாராம்.

வடமேற்கு சன்னதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள், பிரமாண்டமாக நின்ற நிலையில், சங்கு சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கரம் வரத முத்திரையையும், இடது கரம் கட்யவிளம்பித முத்திரையையும் காட்டுகின்றன. திருமலையில் குடிகொண்டுள்ள பாலாஜியைப் போன்று காட்சி தருகிறார். இவருக்கு எதிரே கருடனின் சன்னதி உள்ளது. தென்மேற்கில் உள்ள கருவறையில் ஸ்ரீ மகாகணபதி குடிகொண்டுள்ளார்.

இந்தக் கருவறைகளின் முன்னர் உற்சவமூர்த்தி தாயாருடன் காட்சி தருகிறார். மகாமண்டபத்தின் தென்புறத்தில் யாகசாலை அமைந்துள்ளது. இதனை ஒட்டி அமைந்த சன்னதியில் நடராஜர் அன்னை சிவகாமியுடன் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானையுடன் இணைந்து சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கும் சன்னதி அருகில் உள்ளது. இதையடுத்து நவக்கிரக மேடை அமைந்துள்ளது. இந்த மேடையை ஒட்டி மூலவர் கருவறையை நோக்கியவாறு அனுமன் சன்னதி அமைந்துள்ளது. இதையடுத்து பதினெட்டு படிகளுடன் கூடிய தர்மசாஸ்தா ஐயப்பனின் சன்னதி அமைந்துள்ளது.

தல வரலாறு 1978 ஆம் ஆண்டில், பாஸ்டன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இந்து இந்தியக் குடியேறிய குடும்பங்களின் ஒரு சிறிய குழு ஒருங்கிணைந்து கூட்டு வழிபாடுகளை நடத்தத் தொடங்கினர். இக்குழு நியூ இங்கிலாந்து இந்து கோயில் என்ற அமைப்பினை உருவாக்கியது. மாசசூசெட்ஸ் மாகாணம் மெல்ரோஸ் நகரில் உள்ள நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் ஹாலில் வாராந்திர ஆன்மீகக் கூட்டங்கள் இக்குழுவால் வாரந்தோறும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இக்கூட்டங்களில் பங்கேற்ற அன்பர்கள், நிரந்தர வழிபாட்டுக்கான ஓர் இந்துக் கோவிலுக்கான தேவையை உணர்ந்து, அத்தகைய கோவிலை உருவாக்க தீர்மானித்தனர். நியூ இங்கிலாந்த் பகுதியில் ஒரு பாரம்பரிய இந்து கோவிலை கட்டுவதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டது. குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் $101 உறுதிப் பணமாக அளித்தனர். 1978 ஆம் ஆண்டு இக்குழு மேல்ரோஸில் கூடி தங்களுக்கான கோவில் கட்டும் திட்டத்தை அறிவித்தனர்.

நியூ இங்கிலாந்து இந்து கோயில் குழு, 1981 ஆம் ஆண்டு, ஆஷ்லேண்ட் நகரம், வேவர்லி தெருவில் கோவிலுக்கான 12 ஏக்கர் நிலத்தை கிரயம் செய்தது. பத்மபூஷன். வை. கணபதி ஸ்தபதி வாஸ்து மற்றும் ஆகம விதிகளின் கோவிலுக்கான வடிவமைப்பை உருவாக்கினார். 19 ஜூன் 1984 ஆம் தேதியன்று பூமி பூசை நடைபெற்றது. பின்னர் கட்டுமான வேலைகள் தொடங்கி நடைபெற்றன.

இக்குழுவினர் ஜூன் 1985 ஆம் ஆண்டு, திருமலா-திருப்பதி தேவஸ்தானத்திடம் நிதி உதவியினைக் கடனாகக் கேட்டு விண்ணப்பத்தினர். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிதி உதவியும் கடனாகக் கிடைத்தது. 1986 ஆம் ஆண்டு உட்புற கட்டடப்பணி முழுவதும் நிறைவடையாத நிலையில், கட்டடப்பணிகள் நிறைவடையும் வரை வாராந்திர வழிபாடு நீதாம் வில்லேஜ் கிளப் என்னுமிடத்தில் நடைபெற்றது. கட்டடப் பணிகள் யாவும் 1989 ஆம் ஆண்டு சிறப்பாக நிறைவுற்றது.

கோவில் குடமுழுக்கு விழா 1990 ஆம் ஆண்டு மே மாதத்தில் நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. கங்கை,மிசௌரி, மிசிசிப்பி, கொலராடோ நதிகளிலிருந்து நீர் எடுத்துவரப்பட்டது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இந்து புரோகிதர்கள் இக்கோவில் குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜை மற்றும் சடங்குகளை சிறப்பாக நடத்தினர். இக்கோவிலின் அடித்தளத்தில் கோவில் பிரசாதங்களும், பொதுமக்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்து சன்னதிகளில் படைக்கப்பட்ட பிரசாதங்களும் விநியோகிக்கப்படுகின்றன. இப்பகுதி கலாச்சார மையமாகவும் செயல்படுகிறது. பொதுமக்கள் இதனை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு குடும்ப நிகழ்ச்சிகளையும் விழாக்களையும் நடத்திக்கொள்கிறார்கள்.

இக்கோவிலுக்கான விதிகள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கோவிலை அறங்காவலர் குழு சிறப்பாக நிர்வாகித்து வருகிறது. தொடர்புகொள்ள: முகவரி: தபால் பெட்டி 1716, ஃப்ரேமிங்ஹாம், MA 01701-0201. தொலைபேசி: (508) 881-5775; FAX: 508-881-6401. இமெயில்: Info@Srilakshmi.org. இணையதளம்: https://www.srilakshmi.org கோவில் திறந்திருக்கும் நேரங்கள்: திங்கள்-வெள்ளி காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை. மாலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள்: காலை 10:00 முதல் இரவு 09:00 மணி வரை.

தினசரி பூஜைகள்: இக்கோவிலில் நாள்தோறும் வெங்கடேஸ்வர சுப்ரபாதம், நவக்கிரக அபிஷேகம், ஸ்ரீ சுப்ரமண்ய அபிஷேகம், ஸ்ரீ விநாயக அபிஷேகம், ஸ்ரீ சிவன் (ஆத்மலிங்க) அபிஷேகம், ஸ்ரீ லக்ஷ்மி ஆரத்தி மற்றும் ஏகாந்த சேவை ஆகிய பூசைகள் புரோகிதர்களால் நடத்தப்படுகின்றன. வார பூஜைகள்: ஸ்ரீ ருத்ர அபிஷேகம் திங்கட்கிழமைகளிலும், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை செவ்வாய் கிழமைகளிலும், ஸ்ரீ மகாலட்சுமி அபிஷேகம் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி சகஸ்ரநாம அர்ச்சனை வெள்ளிக்கிழமைகளிலும், சுப்ரபாத சேவை, ஸ்ரீ வெங்கடேஸ்வர அபிஷேகம் மற்றும் அலங்காரம் சனிக்கிழமைகளிலும், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இந்த பூஜைகளின் போது உள்ளூரிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

புவியியல் வானிலை தகவல்: இவ்வூரின் புவியமைவிடம் 42°15′40″N அட்சரேகை 71°27′50″W தீர்க்கரேகை ஆகும். 12.9 சதுர மைல் பரப்பளவு கொண்ட இவ்வூரின் மக்கள் தொகை (2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி) 18,832 ஆகும். குளிர்காலத்தில் இப்பகுதி மிதமானது முதல் கடுங்குளிராக இருக்கும்.பனிப்பொழிவு சராசரியாக 40-50 அங்குலங்கள் (100-130 செ.மீ.) இருக்கும். கோடைக்காலம் இதமான வெப்பத்துடனும், காற்றில் அதிக ஈரப்பதம் கலந்தும் இருக்கும்.

இங்கு எப்படி செல்வது? : அருகிலுள்ள இரயில் நிலையம்: மசாசுசெட்ஸ் விரிகுடா போக்குவரத்து ஆணையம் ஃப்ரேமிங்ஹாம் - வொர்செஸ்டர் வழியில் உள்ள ஆஷ்லேண்ட் நிலையம் ஆகும். இந்நிலையத்தை ப்ளெசண்ட் ஸ்ட்ரீட் அல்லது மெமோரியல் டிரைவ் ஆகிய இடங்களிலிருந்து அணுகலாம். பாஸ்டன் லோகன் விமான நிலையத்திலிருந்து ஆஷ்லேண்ட் 26.2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து, ரயில், டாக்ஸி, கார், ஷட்டில் அல்லது டவுன்கார் மூலம் இக்கோவிலுக்கு வருவதற்கான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

- தினமலர் வாசகர் இரா.முத்துசாமி

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement