Load Image
Advertisement
dinamalar telegram

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

போர்த்துக்கேயர்கள் போர் கொண்டு நின்று கத்தோலிக்க மதம் பரப்ப இலங்கை தேசத்தில் சைவ பெளத்த வழிபாட்டுத் தலங்களை அழித்து சுதேசிய மக்களின் வழிபாடுகளை தடுத்த வேளையில், போர்த்துகேயர்களின் செயலைக் பொறுக்காத சுதேசிய அரசுகளின் பெருமக்கள் சிலரால் சில ஆலயங்கள் புதிதாக உருவாக்கம் பெற்றன. அந்த வகையில் கி.பி. 1650 ஆம் ஆண்டளவில் பெரியராசக்கோன் முதலியாரும் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறிய பிள்ளையார் கோவிலைக் கட்டி அந்த கோவிலுக்கு ஒரு மடத்தையும் கட்டினார்.

இதன் காரணமாக அன்றில் இருந்து இன்று வரை “மடத்தடி” என்று எமது நகரத்து வரலாற்றில் அழைக்கப்படும் அந்த இடத்தில் சுமார் 400 வருடங்களுக்கு மேலாக இருக்கும் அந்த பிள்ளையார் வீரகத்தி பிள்ளையார் என அழைக்கப்படுகின்றார். இந்த வீரகத்தி பிள்ளையார் கோவில் அந்தக் காலத்தில் இருந்து பெரியராசக்கோன் முதலியாரின் வழிச் சந்ததியினர்களினால் இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெரியராசக்கோன் முதலியாருக்குப்பின் குலசேகர முதலியாரும், அவருக்குக்கு பின் அழகைகோனும், அந்த அழகைகோனின் மறைவிற்கு பின்னர் அவரது சிரேஷ்ட புதல்வரான வேலுப்பிள்ளையும் பராமரித்து வந்தார்கள் என்றாலும், பெரியராசக்கோன் முதலியாரின் பரம்பரையில் வந்த சுவாமிநாத முதலியார் இவ்வாலய பொறுப்புக்களை ஏற்று நடத்தினார்.

1801 ஆம் ஆண்டு இந்த இருவர்களினதும் வாரிசுகளான அகிலேசபிள்ளை மற்றும் வீரகத்தி இராசக்கோன் முதலியாரும் சேர்ந்து இந்த சிறு கோவிலை திருத்திச் செப்பனிட்டு பெரியளவில் திருப்பணிகள் செய்து கலை சிற்பம் கொண்ட கற்கோவிலாக மாற்றினார்கள். கல்லும், உலோகமும், செங்கலும், மரமும், கொண்டு மின்னும் இந்த கோவிலில் மண்ணும், சிலையும் மகத்துவம் கொண்டு தமிழர்கலையாற்றலை பிரதிபலிக்க விக்னங்களை போக்கும் அந்த விக்னேஸ்வரர் விரகத்திப் பிள்ளையராக நின்று எமது மண்ணின் மக்களுக்கு அன்றில் இருந்து இன்றுவரை அருளுகின்றார்.

1801 ஆம் ஆண்டு இந்த திருப்பணிகள் தொடங்குவதற்குமுன் அகிலேசபிள்ளை, மற்றும் வீரகத்தி இராசக்கோன், அத்தோடு கோணப்ப கதிர்காம முதலியார் என்பவர்களோடு ஶ்ரீ கணபதிக் குருக்களுக்களும் இணைந்து உடன்படிக்கை சாசனம் எழுதியே திருப்பணிகள் செய்யப்பட்டன. காலம் காலமாக அந்த பரம்பரைப் பாரம்பரியங்களை மேவி தொடர்ந்து சிறப்பாக நடந்த திருக் கோவில் பணிகள் நாட்டில் நடந்த போர் சூழல் காரணமாக தடைப்பட்டாலும். அந்தக் கோவிலும் இனக்கலவரங்களின் காரணமாக தாக்குதலுக்கு உள்ளானாலும் பெரியராசக்கோன் வம்சத்தில் வந்த கணேசலிங்கத்தினாலும் அதன் பின்னர் தற்போது அவரது மகனாலும் அகிலேசபிள்ளை மகனாலும் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றது.

இரண்டாவது உலக யுத்தத்திற்கு முன் நித்திய பூசைகளோடு ஆவணிச் சதுர்த்தி திதியில் கொடியேற்றப்பட்டு பத்து நாட்கள் திருவிழா பெருவிழாவாக நடைபெற்று, நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி, பெருங்கதை, திருவெம்பாவை, திருக்கார்த்திகை, தைப்பூசம், என்பன சிறப்பாக நடைபெற்றதை போன்று இனி வரும் காலங்களில் எமது மண்ணின் தொன்மையான இக் கோவிலை சிறப்புற பராமரிக்க ஆவண செய்ய உலகெங்கும் வாழ் திருகோணமலை வாழ் சைவத் தமிழ் உறவுளை வேண்டிக் கொண்டு நேர்த்தியாக இக் கோவில் சிறப்புற நிர்வாகிக்க நிர்வாகத்தை கேட்டுக் கொண்டு விக்னங்களை தீர்க்கும் வீரகத்தி விநாயகருக்கு என் இந்த பதிவை சமர்ப்பணம் ஆக்குகின்றேன்.

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement