dinamalar telegram
Advertisement

தைவானில் 10ஆம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட்டம்

Share

தீவுகளின் அழகியான தைவான் நாட்டின் தைவான் தமிழ்ச்சங்க 10 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா தலைநகரான தைபேயில் உள்ள ஃபூ ஜென் பல்கலைக்கழகத்தின் மேடம் ரிச்சி உள்ளரங்கத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்கம் தனது தன்னிகரற்ற தமிழ்ச்சேவைதனை ஆரம்பித்து 9 ஆண்டுகள் முடிவடைந்து 10ஆம் ஆண்டில் பொன்னடியெடுத்து வைக்கிறது. கொரோனா பெரும்தொற்றின் காரணமாக அரசு அறிவுரையின்படி மிகுந்த கட்டுப்பாட்டுடன் சுமார் 250 பேர் மட்டும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

பொங்கல் விழாவின் தொடக்கமாக தைவான் தமிழ்ச்சங்கம் நடத்தும் 'விழுதுகள் தமிழ்ப் பள்ளி' மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு இவ்விழா இனிதே தொடங்கப்பட்டது. விழாவிற்கு வருகைபுரிந்த‌ சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் சு.பொன்முகுந்தன் வரவேற்று உரையாற்றினார்.

தைப்பொங்கல் விழாவினை தைவான் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் யூசி, இந்திய-தைபே கூட்டமைப்பின் முதன்மை இயக்குனர் கெளரங்கலால் தாஸ், பூ ஜென் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் சியாங் ஹான் ஷன், டாடா சேவைமையத்தின் நிறுவன தைவான் நாட்டு பிரிவு தலைவர் கார்த்திகேயன் சேதுமாதவன், பூ ஜென் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்விக் கழகத்தின் கல்வித்தலைவர் பேராசிரியர் ஆல்பர்ட் தாங் மற்றும் தைவான் நாட்டு அதிபர் அலுவலக உலக விவகாரத்திற்கான மூத்த ஆலோசகர் பேராசிரியர் வேய் ஷுங் வாங் குத்துவிளக்கேற்றி, தங்களது சிறப்புரையுடன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், தைவான் தமிழ்ச்சங்கம் வருடம் தோறும் நடத்தும் சிறுவர்களுக்கான ஓவிய கண்காட்சி காணொளியாக திரையிடப்பட்டது. ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட 15 சிறுவர்களுக்கு சிறப்பு விருந்தனர் கார்த்திகேயன் சேதுமாதவன் பரிசுவழங்கி ஊக்கப்படுத்தினார்.

கலை நிகழ்ச்சி:

தைவான் தமிழ்ச்சங்கத்தின் கலைநிகழ்ச்சிகள் எப்பொழுதும் நம்முடைய பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக இருக்கும். அந்த வகையில் இத்தைப்பொங்கல் விழாவில் பரதநாட்டியம், ஒடிசி, ஓயிலாட்டம், கரகாட்டம் குறிப்பாக கரகத்தை சுமந்து கண்ணிமை கொண்டு ஊசி எடுத்தல், குழந்தைகளின் நடனம், ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாரதியார், தண்டபாணி தேசிகர், அருண்கிரிநாதரின் பாடல் வரிகள் வீணையின் இசையில் பாடப்பட்டது. சிறுவர் சிறுமியரின் ஆடை அணிவகுப்பு பார்ப்பவர் அனைவரையும் பரவசப்படுத்தியது. குறிப்பாக மீனாட்சி அம்மன் வேடம் பூண்டு, பல்லக்கில் ஆடல், பாடலுடன் ஆடி வந்த குழந்தையின் ஆடை அலங்காரம் மீனாட்சி அம்மனே குழந்தை வடிவில் அரங்கத்திற்கு வந்தது போன்றிருந்தது.

இணைப்பு பாலம்:

இந்த நிகழ்ச்சியில் தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். இந்த வகையில் தைவான் தமிழ்ச்சங்கமானது இந்திய மற்றும் தைவான் மக்களிடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது என்று சொல்வது மிகையாகாது. நிகழ்ச்சிகள் அனைத்தும் முனைவர் விவேகானந்தன், கீர்த்தனா கோகுல், கிரன் கேசவன், அருண் ஆகியோரால் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைவருக்கும் புரியும் வகையில் தொகுத்து வழங்கப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட‌ பார்வையாளர்க‌ள் சுமார் 250 பேருக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் இரமேசு பரமசிவம், பொதுச்செயலாளர் முனைவர். ஆ.கு பிரசண்ணன் விழாவை ஒருங்கிணைத்தனர். நிறைவாக தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் சா. தில்லைநாயகம் அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

- நமது செய்தியாளர் இரமேசு பரமசிவம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement