dinamalar telegram
Advertisement

கதைக்களத்தில் மாணவர்களின் சிறுகதை ஆராய்ச்சி

Share

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் சார்பிலான புத்தாண்டின் முதல் கதைக்களத்தில் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. கடந்த 2/1/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்ற கதைக் களத்தில் “தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர்ச் சிறுகதைகளின் கண்ணோட்டம்” என்னும் அங்கம் முதல்முறையாக அறிமுகம் கண்டது. இவ்வங்கத்தை ஆண்டர்சன் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வழிநடத்தினர்.எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் 'தர்மரதம்' என்ற சிறுகதையையும் முனைவர் மா.இராஜிக்கண்ணுவின் 'கண்ணே' என்ற சிறுகதையையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர். இவ்விரண்டு கதைகளில் கையாளப்பட்ட மொழி, உத்தி, கதைகளின் முடிவு மற்றும் கதை கற்றுத்தந்த போதனைகள் போன்றவற்றை மாணவர்கள் திறமையாகப் பகுப்பாய்வு செய்தனர். இந்த அங்கத்தைச் சிறப்பாக வழிநடத்தினார் மாணவி சுமேதா. இவரின் தாய்மொழி இந்தியாக இருந்த போதிலும், ஆங்கிலம், கன்னடம் போன்ற மொழிகளை வீட்டில் பேசினாலும் தமிழில் பேசுவதையும் படிப்பதையும் பெருமையாக உணர்வதாகக் கூறினார். மாணவர்கள் அனைவரும் ஆங்கிலம் கலக்காத தமிழில் உரையாடியது குறிப்பிடத்தக்கது.கதைக்களத்தில் நடைபெறும் எழுத்தாளர் சந்திப்பு அங்கத்தில் “படைப்பாக்க அனுபவத்திற்கு எழுத்தே தேவையில்லை” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயந்திசங்கர் உரையாற்றினார். படைப்பாற்றல் என்பதும், எழுத்து என்பதும் ஒன்றல்ல என்று தொடங்கி; ஒரு படைப்பில் தேய் வழக்குகளைத் தவிர்ப்பதின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக பயன்படுத்திய சொற்களையும் உவமைகளையும் மறுபயனீடு செய்யாமல் புதிய சொற்களைப் பயன்படுத்துவது வாசகர்களின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் என்றும் குறிப்பிட்டார். நமக்குள் எழும் எண்ணற்ற கேள்விகளை, சமூகப்பார்வைகளை, சிக்கல்களை மனதிற்குள் முதலில் அசைபோட்டு, நிதானமாக எழுதப்படும் படைப்புகள் நிரந்தரமான வாசக அனுபவத்தை அளிக்க வழிசெய்யும் என்றார்.உரையாடலின்போது, தான் கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழோடு பயணித்த அனுபவம்தான் தற்போது ஆங்கிலத்திலும் சிறப்பாகப் படைப்புகளை எழுதுவதற்கு தனக்குத் துணைபுரிவதாகக் கூறினார். இவ்வங்கத்தை சௌமியாதிருமேனி செவ்வனே வழிநடத்தினார்.எழுத்தாளர் ஜெயந்திசங்கரின் 'திரிந்தலையும் திணைகள்' என்ற நாவலைப் பற்றிய தன் கருத்துகளையும் சிங்கப்பூர் பின்புலத்துடன் கதை எப்படி பயணிக்கிறது என்பதையும் மிகவும் சுவையாகப் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் ஹேமா. எழுத்தாளர் ஜெயந்திசங்கரைக் குறிப்பிட்டுப் பேசுகையில் அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்லாமல் சிறந்த ஓவியரும் கூட என்றும் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டிகளில் தொடக்கத்தில் எழுதி பரிசு பெற்றவர் என்றும் சிங்கப்பூர்த் தமிழ்எழுத்தாளர் கழகத்தலைவர் நா.ஆண்டியப்பன் புகழாரம் சூட்டினார். இந்தியாவில் செயல்படும் 'டெல்லிவையர்' என்ற இணையதளம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 2021இல் வெளியான ஆங்கில நூல்களிலிருந்து ஐம்பது சிறந்த எழுத்தாளர்களின் பெயர்ப் பட்டியலில் எழுத்தாளர் ஜெயந்திசங்கரும் இடம் பெற்றிருப்பது சிங்கப்பூருக்கும் எழுத்தாளர் கழகத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும் என்றார் அவர். ஜெயந்தியின் தபுலா ராஸா என்னும் ஆங்கில நூலைச் சிறந்த நூல்களில் ஒன்றாக அந்த இணையதளம் தேர்வு செய்தது.தனது தலைமை உரையில், சிறந்த படைப்புகளை எழுதுவதற்குத் தொடர் வாசிப்பு மிக முக்கியம் என்றும் பரிசுகளுக்கு என்றில்லாமல் பயிற்சிகளுக்காகத் தொடர்ந்து எழுதுபவர்களின் படைப்புகள் பண்படும், பின்னர் பரிசுகளும் விருதுகளும் தானே தேடிவரும் என்று அவர் அறிவுறுத்தினார். வரவிருக்கும் முத்தமிழ்விழா பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறி அந்தப் போட்டிகளில் அனைவரும் குறிப்பாக மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுதன்தலைமையுரையைநிறைவுசெய்தார். ஜனவரி மாதக்கதைக்களத்தில் வெற்றிபெற்ற படைப்புகளின் அறிவிப்போடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.- நமது செய்தியாளர் வெ.புருேஷாத்தமன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement