dinamalar telegram
Advertisement

சிசெல்ஸ் ஆலயத்தில் விஜயதசமி விழா கோலாகலம்

Share

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி நிறைவு விழாவாக அக்டோபர் 15 ஆம் தேதி விஜயதசமிப் பெரு வழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலையிலே கொலு மண்டபத்திலே சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆலயப் புத்தகங்கள், இசைக்கருவிகள் மீண்டெடுக்கப்பட்டு இசைக் கருவிகள் கோலாகலமாக வாசிக்கப்பட்டன.குழந்தைகளுக்கு சிவாச்சார்யார்கள் வித்யாரம்பம் செய்துவித்துக் கல்வி யாத்திரையைத் துவக்கி வைத்தனர். குழந்தைகளுக்குப் பேனா, பென்சில், ஜாமெண்டரி பாக்ஸ் முதலியவைகளை ஆலய நிர்வாகம் வழங்கி மகிழ்வித்தது.மாலையில் அன்னை ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அவதாரமெடுத்து வதம் செய்ய உக்கிரமாகக் காட்சியளித்தார். சின்னஞ் சிறு மழலைகள் ஸ்ரீ கிருஷ்ணராகவும், ஆண்டாளாகவும், மீராவாகவும், வேட்டி, ஜிப்பா அணிந்து புலவர் போலவும் மாறு வேடந்தாங்கி வந்ததும் ஒவ்வொருவர் வரும் போதும் கரவொலி எழுப்பி வரவேற்றதும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.ஸ்ரீ அம்பிகைக்கு சோடஸ உபசார மகா தீபாராதனை நடைபெற்று சர்வ அலங்கார நாயகியாக மங்கல இசை முழங்க ஆலய உள்வீதி வலம் வந்த போது பக்தப் பெருமக்கள் “ ஓம் சக்தி...ஓம் சக்தி என கோஷித்தது மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து மகிஷாசுரமர்த்தினி வதம் செய்யப் புறப்பட்டார். அதற்காக அமைக்கப்பட்டிருந்த வாழைக் கன்றுக்குத் தலைமை அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சார்யார் பூஜைசெய்து பதினோரு அம்புகள் மேலே கீழே எட்டுத் திக்குகளிலும் எய்து அசுரனை வதம் செய்த போது, பக்தர்கள் “ அல்லவை நீங்கி நல்லவை ஓங்கட்டும். நன்மை வந்தெய்துக, தீதெலாம் நலிக “ என கோஷமிட்டனர். ஸ்ரீகாந்த சிவாச்சார்யார் வதம் செய்தவனை அகற்றினார். பிரம்மஹத்தி தோஷம் நீங்க பூஜை செய்யப்பட்டது.சாந்த வடிவில் ஸ்ரீ அம்பிகை ஆலய உள் வீதி வலம் வர பதினெட்டு வகை வாசனாதித் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கலசாபிஷேகம் நடைபெற்று ஸ்ரீ அம்பிகைக்கு முக்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளையும் அவரது துணைவியார் கிருஷ்ணவேணி அம்மாளும் கொலு விசர்ஜனம் செய்தனர். அதாவது கொலுவுக்கு வைத்திருந்த கலைப் பொருட்களைப் படியிறக்கம் செய்தனர்.திரளாகக் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருட் பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமாகத் தக்காளி சாதம் வழங்க நவராத்திரிப் பெரு விழா நிறைவு கண்டது. இப்பெருவிழாவுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் ஆலயத் தலைவர் தமது நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்தார். ஒன்பது நாளும் அற்புதமாக அலங்காரம் செய்து அருள்பாலிக்க வைத்த தலைமை அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சார்யார், ஸ்ரீகாந்த சிவாச்சார்யார், மங்கல இசையில் மூழ்கடித்த வித்துவான்கள், அறுசுவைப் பிரசாதம் தயாரித்து அசத்திய மடப்பள்ளிப் பொறுப்பாளர் மயிலாடுதுறை ராமன் சுப்பிரமணியம் முதலியோரது இறைசேவை அனைவராலும் பாராட்டப்பட்டது.- நமது தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement