dinamalar telegram
Advertisement

சிசெல்ஸ் ஆலய நவராத்திரி நான்காம் நாள் விழா

Share

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி உற்சவ நான்காம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அக்டோபர் திங்கள் பத்தாம் நாள் மாலை சரியாக ஆறு மணிக்கு விழா துவங்கியது. அன்னை ஸ்ரீ கஜலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

மங்கல மகளிர் நூற்றுக்கு மேற்பட்டோர் நமது பாரம்பரிய முறைப்படி பட்டாடை அணிந்து வழிபாட்டில் கலந்து கொண்டனர். எல்லோரும் ஒருங்கிணைந்து லலிதா நவரத்தின மாலை, லிங்காஷ்டகம் முதலிய ஸ்தோத்திரங்களைப் பாடி வழிபட்டது தெய்விகப் பிரவாகத்தைத் தோற்றுவித்தது எனலாம். நிறைவாக சோடஸ உபசார மகா தீபாராதனை நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

சின்னஞ் சிறிய தீவில் வாழும் மக்கள் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பின்தொடரும் வண்ணம் ஆலயம் நாள்தோறும் வளர்ந்து வருகிறது. இன்றைய அருட்பிரசாதத்துடன் அன்னப் பிரசாதம் பல்வகைக் காய்கறி சாதம், வழக்கமான வடை, பாயசமும் உண்டு. பக்தப் பெருமக்கள் வேண்டுமளவு உண்டு மகிழ்வதைக் கண்டு களிக்கும் தலைமை அர்ச்சகருக்கே சில சமயம் அன்னப் பிரசாதம் கிடைப்பதில்லை. இதிலே தாம் மிக மகிழ்வதாக அவர் கூறுகிறார்.

ஸ்ரீ நவசக்தி விநாயகப் பெருமான் அருளால் வேண்டியன வேண்டியவாறு பக்தர்களுக்கு நிறைவாகக் கிடைக்கிறது. ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை தலைமையில் உள்ள நிர்வாகக் குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டத் தக்கதாகும்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement