dinamalar telegram
Advertisement

31 ஆம் தேதி லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் இயங்கலைத் திறப்பு

Share

தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் நீண்ட நெடிய வரலாற்றையும் நாம் எவ்வளவுதான் உரக்கச் சொன்னாலும், அவை உள்ளங்கை நெல்லிக்கனியாக இல்லை. இவற்றை அறியும் முயற்சியில் வரலாற்று பேராசிரியர்களிடமும், தொல்லியலாளர்களிடமும் மொழியியலாளர்களிடமும், மேலும் அறிவியலாளர்களிடம் கூட முரண்பட்ட கருத்துகளே உள்ளன. இருப்பினும் எந்த ஒரு அறிஞரின் கருத்துகளும், கருதுகோளுகளும் தவிர்க்கப்படக் கூடியவையல்ல. ஏனெனில், அவர்களது ஒவ்வொரு கருத்துக்களும், கருதுகோளும் சான்றுகளுடனேயே நிறுவப்பட்டுள்ளன.
அப்படியானால், ஏன் இந்த முரண்பாடு? காரணம், போதிய தரவுகளும், அதற்கான சான்றுகளும் கிடைக்காமையும், பரந்துபட்ட ஆய்வுகள் நடத்தப் படாமையுமேயாகும், மேலும், பண்டைய காலம் தொட்டே வரலாற்று ஆவணங்கள் திறம்பட பேணப்படாமையாலும் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் அரசியல் காரணங்களினாலும் அழிந்து போயின. தற்போது கூட, பரவலான விரிந்துபட்ட தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை அல்லது மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் அதற்கென சூழ்நிலைகளும் தமிழர்களுக்குச் சார்பாக இல்லை.
அப்படியானால் என்ன செய்வது? முதலாவதாக, தொல்லியல் ஆய்வுகளையும் அறிவியல்சார் ஆய்வுகளையும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் இவ்வாய்வுகள் ஓர் குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டுமல்லாது, உலகளவில் பரந்துபட்டு செய்யப்பட வேண்டும். ஏனெனில் தமிழர்களது எண்ணிலடங்கா அறிவுக் கருவூலங்கள் உலக நாடுகளின் அருங்காட்சியகங்களிலும், நூலகங்களிலும் காணக்கிடக்கின்றன. அது மட்டுமல்லாது, பண்டைய நாகரிகங்களுடன் தமிழருக்கான உறவினையும் அல்லது தொடர்புகளையும் இம்முயற்சியால் கண்டறிய முடியும்.

அடுத்ததாக, அறிஞர்களிடையே உள்ள முரண்பட்ட கருத்துகளுக்கிடையிலான ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிய வேண்டும். இவ்வேற்றுமைகளைத் தகர்ப்பதற்குத் தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால், இந்த அறிஞர்களது கருத்துக்கள், கருதுகோள்கள் மற்றும் ஆய்வுகளை ஓரிடத்தில் சேகரிப்பதே மிகப்பெரிய பயணமாக உள்ளது.
பல்வேறு தமிழைறிஞர்களும் ,ஆர்வலர்களும் பலவிதப்பட்ட முறையில் மேற்கூறிய ஆய்வுகளிலும் தேடல்களிலும் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில் நாமும் அறிஞர்களின் கருதுகோள்களையும் தேடல்களையும் ஒரே தளத்தில், ஒரே நேரத்தில் உலகில் எப்பகுதியிலிருந்தும் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு மெய்நிகர் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.அதற்கு, ”தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம்” எனப்பெயர் சூட்டியுள்ளோம்.
இவ்வருங்காட்சியகத்தில் பல்வேறுபட்ட அறிஞர்களின் கருத்துகளும் கருதுகோள்களும் தேடல்களும் சான்றுகளுடன் எல்லாரும் எளிமையாக அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்த முற்பட்டிருக்கின்றோம்.
இலண்டனை மையப்புள்ளியாகக் கொண்டு தொடங்கிய இவ்வருங்காட்சியகம் அனைத்துலக அளவில் பேராசிரியர்கள், மொழிஆய்வாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள், வரலாற்றாொசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், கணினித் தொழிற்நுட்பவியலாளர்கள் என பல நூறு ஒருங்கிணைந்த சான்றோர்கள், அறிஞர்களின் உதவியோடு உருவாக்கப்பட்டு வருகின்றது .இது தொடர்ந்து வளர்ந்து வர பல ஆண்டுகள் ஆகலாம். எனினும் இவ்வருங்காட்சியகத்தின் முதலாவது படிநிலையை உங்களுக்கு அறிமுகப்படுத்த நாம் விரும்புகின்றோம்.
ஆதலால், எதிர்வரும் 31.07.2021 அன்று பிரித்தானிய நேரம் காலை 11.00 மணிக்கு நடைபெற இருக்கும் இணையவழிச் சந்திப்பினூடாக எம்மக்களுக்கு இதனை அறிமுகப்படுத்த விரும்புகின்றோம். இந்த இணையவழி அருங்காட்சியகத்தின் தொடக்க நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடனும் ஆவலுடனும் அழைக்கின்றோம்.


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement