dinamalar telegram
Advertisement

சிங்கப்பூர் தமிழ் மொழி மாத நிறைவு விழா

Share

“ தமிழை நேசிப்போம் – தமிழில் பேசுவோம் “ என்பதைப் பிரபலப்படுத்தி தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்திட ஆண்டுதோறும் சிங்கப்பூர் வளர் தமிழ் மொழி இயக்கம் நடத்தும் தமிழ்மொழி விழா மே திங்கள் 2 ஆம் தேதி நிறைவு கண்டது. சிங்கப்பூரின் பிரதான தமிழ் அமைப்புக்கள் அவரவர் சார்பில் விழா எடுத்து மகிழ்வித்தன. வழக்கம் போல கவிமாலை அமைப்பு மே 2 ஆம் தேதி நிறைவு விழாவினை மெய்நிகர் நிகழ்வாக கணையாழி விருது – தங்க முத்திரை விருது – நவீன நாடகமெனப் பல்சுவை நிகழ்வுகளாக மிகச் சிறப்பாக நடத்தியது. சிறப்பு விருந்தினராக நாடாளு மன்ற மேனாள் நியமன உறுப்பினர் கே.கார்த்திகேயன் கலந்து கொண்டு பரிசுகளையும் விருதுகளையும் வழங்கி கவுரவித்தார். வளர் தமிழ் இயக்கத் தலைவர் மனோகரன் நிறைவுரை ஆற்றினார். அவர்தம் உரையில் மாணவர்களின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டி இவை போன்ற செயல்கள் பெருகுமாயின் வளர் தமிழ் இயக்கமே தமிழ்மொழி விழாவை நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றார். அவர் மேலும் பேசுகையில் இல்லந்தோறும் பிள்ளைகளிடம் தமிழிலேயே உரையாட வலியுறுத்தினார் .சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட இலக்கிய – கலாச்சார – பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றதைச் சுட்டிக் காட்டிய மனோகரன் இவைகளுக்கு ஒத்துழைத்த கற்றல் வளர்ச்சிக்குழு – மரபுடைமைச் சங்கம் மற்றும் ஊடகங்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.. இளைய தலைமுறையினிரிடையே தாய்த் தமிழைக் கொண்டு சேர்த்த மனநிறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். விழாவில் மகா கவி பாரதியின் எள்ளுப் பேரனும் திரைப்படப் பாடலாசிரியருமான கவிஞர் நிரஞ்சன் பாரதி வாழ்த்துரை வழங்கினார். “ சுடர்மிகு நவகவிதை “ என்ற தலைப்பில் - பாரதி பரம்பரையைப் பிரதிபலிக்கும் வண்ணம் உரையாற்றினார். சிங்கப்பூரில் தமிழ்மணம் கமழ நிகழ்வுகள் நடைபெறுவது தமக்கு மட்டிலா மகிழ்ச்சி தருவதாகக் குறிப்பிட்டார்.
விழாவின் முத்திரை நிகழ்வாக ‘” கணையாழி விருது “ அறிவிக்கப்பட்டது. இவ்வாண்டுக்கான விருதாளராக எழுத்தாளரும் மூத்த தமிழாசிரியருமான பொன்.சுந்தரராசு பலத்த கரவொலிக்கிடையே அறிவிக்கப்பட்டார். எம்.ஏ.முஸ்தபா ஆண்டுதோறும் வழங்கும் கணையாழியை வள்ளல் அப்துல் ஜலீல் பொன்னாடை போர்த்த – சிறப்பு விருந்தினர் கார்த்திகேயன் மாலை அணிவித்திட – முஸ்தபா கணையாழி அணிவித்து கவுரவித்தார். இளம் கவிஞருக்கான தங்க முத்திரை விருதுக்கு கவிமாலைக் கவிஞர் அஷ்ரப் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குத் தொழிலதிபர் வள்ளல் ஜி.வி.இராம் தங்க முத்திரை வழங்கி பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கவுரவித்தார். மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளித்துப் பாராட்டப்பட்டது. கவிமாலைக் கவிஞர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் மாறுவேடப் போட்டி அனைவரையும் கவர்ந்தது. முத்தாய்ப்பு நிகழ்வாக கவிமாலைக்கெனத் தயாரிக்கப்பட்ட “ பசலை “ எனும் நவீன நாடகம் புதுமையாகவும் உருக்கமாகவும் தத்ரூபமாகவும் காட்சியளித்து பிரமிப்பைத் தந்தது.
முன்னதாக இலக்கியா மதியழகன் தமிழ் வாழ்த்துப் பாட கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இன்பா தலைமை உரையாற்றுகையில் இளைய சமுதாயத்திடை குறிப்பாக மாணவரிடை தமிழைக் கொண்டு சேர்த்ததில் கவிமாலையின் பங்கினை எடுத்துரைத்தார். துணைச் செயலாளர் இராஜீ ரமேஷ் மாற்றி அமைக்கப்படும் மாணவர் திட்டம் பற்றி அறிவித்தார். செயலாளர் கவிஞர் சேவகன் நன்றி நவில – மாணவமணிகள் இரகுநாதனும் தமிழ்மணியும் நிகழ்வினை நெறிப்படுத்தினர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement