சிங்கப்பூரில் ஸ்ரீ கூடாரவல்லி திருப்பாவை விழா
மார்கழி மாதமும் புரட்டாசி மாதமும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கு உகந்த மாதங்கள். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்பது ஸ்ரீ கிருஷ்ண பகவான் திருவாக்கு. இந்த மாதத்தில் பெண்கள் வைகறையில் எழுந்து நீராடி திருப்பாவை பாடி ஸ்ரீமந் நாராயணனை வழிபடுவது வழக்கம். மார்கழி மாதத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் முப்பது நாட்களும் நோன்பிருந்து ஸ்ரீமந் நாராயணனை அடைந்தது வரலாறு. இந்த மரபை ஒட்டி சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஜனவரி 11 ஆம் தேதி ஸ்ரீ கூடாரவல்லி திருப்பாவை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மங்கள மகளிர் வைகறையில் ஸ்ரீ ராமர் சந்நிதானம் வந்து திருப்பாவை – திருப்பள்ளி எழுச்சி பாடி நோன்பிருந்து சாத்துப்படி செய்தார்கள். திருப்பாவையில் 27 ஆவது பாசுரம் கூடாரவல்லி. எம்பெருமானுக்கும் தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. முப்பது விதமான கனிகள் – பட்சணங்கள் சீர் வரிசையாக ஆலயம் வலம் வந்து எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் 30 பாசுரத்திற்கும் முப்பது ஆராதனை செய்யப்பட்டு தளிகை சமர்ப்பிக்கப்பட்டது மிக விசேஷமான வைபவம். மகா தீபாராதனையின் போது பக்தப் பெருமக்கள் உருக்கத்தோடு வழிபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!