Advertisement

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி

Share

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 34 ஆவது மாதாந்திர நிகழ்ச்சி 08-08-2020 (சனிக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு ZOOM வழியாக நடைபெற்றது. வழக்கமாக, பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றுவரும் மாதாந்திர நிகழ்ச்சி, சமீபத்திய கொரோனா தொற்று காரணமாக இணையம் வழியாக நடைபெற்றது.‘வாழ்க நிரந்தரம்’ என்ற தமிழ் வணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது . குழந்தை நிகழ்ச்சியில் முதலாவதாக பள்ளி சிறுவன் ஜோஷித் ‘மாடு மேய்க்கும் கண்ணே, நீ போக வேண்டாம் சொன்னேன்’ என்ற பக்தி பாடலைப் பாடினார். திருமதி. இராஜேஸ்வரி வினோத் இணையம் வழி இணைந்தோர் யாவரையும் வரவேற்றார் .
சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தில், சிறுமி சமிக்ஷா “நெற்பானையும் எலியும்” என்ற தலைப்பில் பாடலை பாடினார். அதற்கு அடுத்து சிறுவன் ஜோஷித், ‘இடரினும் தளரினும்’ என துவங்கும் தேவாரப் பாடலை பாடினார். சிறுமி கௌஷிகா ‘இரண்டு நாய்கள்’ எனும் தலைப்பில் அமைந்த கதையை அழகுற கூறினார். சிறுமி தீக்ஷிகா, ‘எலியும் பூனையும்’ என்கிற தலைப்பில் நன்னெறி கதையை கூறினார். சிறுவன் நிதின், மகாகவி பாரதியாரின் பாடலை பாடினார். காரைக்குடியில் இருந்து இணைந்த மாணவி ஷபா, ‘சிங்கமும் எலியும்’ என்கிற தலைப்பில் கதை கூறினார்.
பின்பு சிறுமி ஜீவஜோதிகா, பாரதிதாசனின் கவிதைகளில் ‘வாழ்வு’ என்ற தலைப்பில் அமைந்த கவிதையை பாடினார். சிறுவன் நித்தீஷ், எனக்கு பிடித்த பழம் – தர்பூசணி என்ற தலைப்பில் அழகாக பேசினார்.

சிறுவர் அங்கத்திற்குப் பிறகு , தமிழ் சான்றோர் வரிசையில் முன்னதாக அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி “இலக்கு” என்ற தலைப்பில் அறிமுகவுரை வழங்கினார். மேலும் சங்க இலக்கியங்களின் வழி “மண் பயனுற வாழ்தல்” பற்றி விவரித்தார் .

செயற்குழு உறுப்பினர்களான பொறிஞர் திரு குமரேசன் சண்முகம், ‘அறம் செய்ய விரும்பு’ என்ற தலைப்பிலும், முனைவர் திருமதி தேன்மொழியாள், ‘உடலும் உள்ளமும்’ என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றினர். திருச்சிராப்பள்ளியிலிருந்து பேராசிரியர் முனைவர் மு. அமிர்தகடேஸ்வரர், ‘நெல்லோடு சேர்ந்த கற்கள்’ என்கிற தலைப்பில், தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களைப் பற்றி ஆழமாக பேசி பார்வையாளர்களிடையே தமிழின் மீதுள்ள ஆர்வத்தை கூட்டினார். இவர் உரையின் மூலம் பார்வையாளர்கள் தற்கால பேச்சு தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றனர்.
அதற்கடுத்து சங்கத்தமிழ் சிறப்புரையாளராக விழுப்புரத்திலிருந்து முனைவர் திருமதி இரா .தமிழரசி ‘நெடுநல்வாடை காட்டும் பாசறையும் பள்ளியறையும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர்தம் உரையில் நக்கீரருடைய புலமை நயமும் சங்கத்தமிழரின் அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் பாங்குற எடுத்து கூறினார். மேலும் இவருடைய உரை, கேட்போர் மனதில் சங்க இலக்கிய நூல்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்தது.

கவிதையும் கானமும் எனும் பிரிவில் , காரைக்குடியில் இருந்து இணைந்த ஆசிரியை சபீதா பானு, ‘பசியின் நூறு நிறங்கள்’ என்ற தலைப்பில் அழகிய கவிதையை வழங்கினார். அடுத்து புதுச்சேரியிலிருந்து இணைந்த முனைவர் ஞா.சத்யா ஐயப்பன், ‘மழலைக்கான உணவியல் மந்திரங்கள்’ எனும் தலைப்பில் தாய்ப்பாலின் இன்றியமையாமையை விளக்கும் கவிதையை வழங்கினர்.திருமதி இராஜேஸ்வரி வினோத் மற்றும் திருமதி வனிதா கோகுல் இருவரும், நிகழ்ச்சியை அழகுற நெறியாளுகை செய்தனர் . திருமதி வனிதா கோகுல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாவருக்கும் நன்றியுரை வழங்கினார் . ஆசிரியை திருமதி மஹாஜபீன் மற்றும் திரு இரமேஷ்குமார் ஆகிய இருவரும் நிகழ்ச்சியின் காணொளியை முகநூல்-நேரலையில் ஒளிபரப்பும் பணியை சிறப்புற செய்தனர்.
– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement