Advertisement

சிட்னியில் சிவமஹோத்சவ திருவிழா

ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஹெலென்ஸ்பர்க் என்ற புறநகர்ப் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் அமையப் பெற்றுள்ளது.. இந்த ஆலயம் 1978ம் ஆண்டு கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில், அழகிய இயற்கை வளங்களைச் சுற்றி உள்ள ஒரு மலைமேல் முற்றிலும் ஆகம முறைப்படி கட்டப்பட்டது. முதலில் ஸ்ரீவெங்கடேவரப் பெருமாள் ஆலயமாகத் தொடங்கப்பட்டாலும் பின்பு சிவன் கோவிலும் இணைக்கப்பெற்று, ஆஸ்திரேலியாவிலே பெரிய கோவில் என்ற பெருமை பெற்றது.இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் 13ம் நாள் முதல் 23ம் நாள் வரை சிவமஹோத்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. முதல் நாள் கொடியேற்றத்துக்குப்பின், மறுநாள் ரிஷப வாகனத்தில் தொடங்கி சூரிய பிரபா வாகனம், அதிகார நந்தி வாகனம், கைலாச பர்வத வாகனம், காமதேனு வாகனம், சேஷ வாகனம், கஜ வாகனம், அஷ்வ வாகனம் என்று முதல் எட்டு நாட்களும் சந்திரமௌலீஸ்வரர் சுவாமியும் திரிபுர சுந்தரி அம்மனும் பலவகை அலங்காரத்துடன் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு ஆசி புரிந்தனர்.இடையில் எட்டாம் நாள் பிப்ரவரி 21ம் நாள் வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரித் திருவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்று இரவு முழுவதும் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் பயன்பெற்றார்கள். ஒன்பதாம் நாள் அன்று நடைபெற்ற மாபெரும் தேர்த்திருவிழாவில் விநாயகரும், ஸ்ரீ துர்க்கை அம்மனும், சண்டிகேஸ்வரரும் இணைந்து வந்தது கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையாக அமைந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இறுதி நாளில் த்வஜ அவரோஹனத்துடன் சிவமஹோத்சவ திருவிழா நிறைவு பெற்றது.

- தினமலர் வாசகர் அழகப்பன் முத்து

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement