Advertisement

சிங்கப்பூர் கதைக்களம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கதைக்களம், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்ட நிகழ்வாக சிறப்பாக நடைபெற்றது. இது பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து பெக் கியோ சமூக மன்றத்தில் நடக்கும் இறுதி நிகழ்வு என்பதால் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சியாகவும் அமைந்தது.முதல் அங்கமாக ஆங்கர் கிரீன் தொடக்கப் பள்ளி, தொடக்கநிலை மூன்று படிக்கும் சனா கான் அழகாக ஒரு நீதிக் கதையை ஏற்ற இறக்கங்களோடு சிறப்பாகச் சொன்னார். பொதுப்பிரிவுப் போட்டிக்கு வந்த கதை ஒன்றினை வினுதா கந்தகுமார் மற்றும் கதை விமர்சனம் ஒன்றை தமிழ்ச்செல்வி வாசித்தனர்.சிங்கை உள்ளூர் எழுத்தாளர் அங்கத்தில், எழுத்தாளர், எழுத்தாளர் கழக மதியுரைஞர் முனைவர் சுப திண்ணப்பனின் எழுத்துப்பணி பற்றியும், அவரின் சாதனைகளையும், அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளையும் பற்றி மோனலிசா சிறப்பாக விவரித்தார். இந்த அங்கத்தை மலையரசி வழிநடத்தினார்.நமது உள்ளூர் வளரும் எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் இரண்டாவது நூல் 'இவள்...?' அறிமுகம் கண்டது. அந்தச் சிறுகதை தொகுப்பு நூல் பற்றி சிங்கை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் விரிவான கருத்துரை காணொளி திரையிடப்பட்டது. அனைத்து சிறுகதைகளும் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்திருந்ததைச் சொல்லி, அடுக்கு வீட்டு வாழ்வியலை ஒட்டி அமைந்த 2 கதைகளின் செம்மையை விரித்துரைத்தார். சி.த.எ.க துணைத்தலைவர் நா.ஆண்டியப்பன் புத்தகத்தை வெளியிட ஆனந்தபவன் உரிமையாளர் பானுமதி ராமச்சந்திரா முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.சிறப்புப் பேச்சாளராக முனைவர் இரத்தின வேங்கடேசன் 'வாசக சாலை” என்ற தலைப்பில் வளரும் எழுத்துதாளர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பல்வேறு மேற்கோள்களோடு மிகச் சிறப்பாக எடுத்தியம்பினார்.கழகத்தின் தலைவர் சுப. அருணாச்சலம் அடுத்து வரும் சிறுகதைப் பயிலரங்கு பற்றியும், முத்தமிழ் விழா பற்றியும் சொல்லி அடுத்த மாதம் முதல் விக்ட்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலகத்தில் கதைக்களம் நடைபெறும் என்று அறிவித்தார். பெக் கியோ சமூக மன்றத்தில் மாதந்தோறும் கதைக்களம் நடைபெற உறுதுணையாக இருந்த பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவிற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் மேனாள் மற்றும் இன்னாள் தலைவர்களான ஹாஜா முஹைதீன் மற்றும் ஜெகதீஷ், சி.த.எ.கழகத்தோடு இணைந்து பணியாற்றிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததோடு வருங்கால நிகழ்வுகளில் கைகோர்க்க என்றும் தயாராய் இருப்பதாய் உறுதியளித்தார்கள்.கழகத் துணைத்தலைவர் நா ஆண்டியப்பன் தனது உரையில் கழகம் கடந்து வந்த பாதையைச் சுருங்கச் சொல்லி, பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவோடு 17 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடைபோட்டதையும் நினைவுகூர்ந்தார்.இம்மாத சிறுகதை போட்டிகளில் மாணவர் பிரிவில் செல்வன் அர்ஜுன் பரிசு பெற்றார். பொதுப்பிரிவுப் போட்டியில் சித்ரா தணிகைவேல் முதல் பரிசும், சியாம்குமார் இரண்டாவது பரிசும், மலையரசி சீனிவாசன் மூன்றாவது பரிசும் பெற்றனர். சிறந்த விமர்சனத்திற்கான முதல் பரிசு பிரபா தேவி, இரண்டாம் பரிசு மலையரசி சீனிவாசனுக்கும் கிடைத்தன. ஃபேஸ்புக் குழுவில் போட்டிச் சிறுகதைகளுக்கான சிறந்த கருத்தைப் பதிவு செய்த காசிநாதனுக்கு ராம.தியாகராஜன் புத்தகப் பரிசு வழங்கினார். கழக செயலவை உறுப்பினரும், கதைக்களப் பொறுப்பாளருமான பிரேமா மகாலிங்கம் நிகழ்வினை செவ்வனே வழிநடத்தினார். ஆனந்தபவன் சுவையான தேநீர் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தது.

- தினமலர் வாசகர் சியாம்குமார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement