Advertisement

ஒளி நிறைந்த உலகம் வெகு தூரத்தில் இல்லை- நம் வாழ்நாளிலேயே காண்போம்: தவத்திரு மருதாசல அடிகளார்

ஒளி நிறைந்த உலகம் அமைவது வெகு தூரத்தில் இல்லை. நம் வாழ்நாளிலேயே காண முடியும். அதிகாரத்தின் மூலமாகவோ - பணத்தின் மூலமாகவோ அல்ல. ஆன்மநேய ஒருமைப்பாடு - உலக சகோதரத்துவம்வழி நடந்தேறும். அதற்கு ஜீவகாருண்யம் எனும் நெய் தேவை. ஆன்மாக்கள் ஒன்று. எல்லா உயிர்களுக்குள்ளும் ஒருமைப்பாடு - ஆன்ம நேய ஒருமைப்பாடு இன்றைய தேவை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். எல்லாம் கடவுள் மயம். ஆன்மாக்கள் ஒன்றுபட வேண்டும் என கோவையை அடுத்த பேரூர் அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் திருமடத்தின் இருபத்தைந்தாவது குருமகா சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிங்கப்பூர் இந்து சபை நடத்திய விழாவில் வள்ளலாரும் தமிழும் என்ற தலைப்பில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில், ஒன்பதாம் வயதில் நிலைக் கண்ணாடி முன் தியானம் செய்யும் போது சீர்கொண்ட தெய்வ வதனங்களாறும் திகழ் கடப்பந் தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் கூர் கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியும் வண்மைத் தணிகாசலமும் அவருக்குத் தெரிகிறது. முருகன் காட்சியளிக்கிறார் முருகா என்ற சொல்லில் வல்லினம் மெல்லினம் இடையினம் மூன்றும் உள்ளது .தமிழ் என்ற சொல்லே திருவைந்தெழுத்து என்கிறார் பாம்பன் சுவாமிகள். த் + அ ம் + இ ழ் . த வில் தொடங்கி ம் இல் முடிகிறது இச்சொல். த தெய்வத் தன்மை கொண்டது. மி என்ற எழுத்தை ஐந்து சக்திகளாகக் காட்டுகிறார்.
வள்ளல் பெருந்தகை இவ்வைந்தெழுத்தைப் பஞ்சாட்சரத்துடன் ஒப்பிடுகிறார். வள்ளற்பெருமானின் ஆறு திருமுறைகளில் முதல் ஐந்து திருமுறைகள் பக்குவப்படுத்த உதவுகின்றன. மெய்யுணர்வு தருகின்ற அறிவியல் நுட்பங்கள் காணப்படுகின்றன. இன்றைய அறிவியல் கருத்துக்களை பன்னெடுங்காலத்திற்கு முன்னரே நமது ஞானியர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஞாலம் என்றால் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பது பொருள். உலகம் எப்படியுள்ளது ? மண்திணிந்த ஞாலம் எனப் புறநானூறு தெரிவிக்கிறது.

திருமுறைகளில் பல அறிவியல் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் அறிவியல் - உளவியல் - தாவர இயல் - வேதியியல் கருத்துக்களிருக்கின்றன. திருவாசகத்தை நெறியாகக் கொண்டவர் வள்ளலார். மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தை தாம் கலந்து பாடுவதாகக் கூறுகிறார். திருக்குறளை மக்களிடம் எடுத்துச் சென்றவர் வள்ளலார். உலகு என்ற சொல் தமிழுக்கே உரியது. இந்தச் சொல்லுக்கு வள்ளல்பெருந்தகை கூறிய விளக்கம் இது வரை யாரும் கூறாததாகும்.
விரிந்து - பரந்த சிந்தனை உடையவர் வள்ளலார். காக்கை குருவி எங்கள் சாதி என மகாகவி பாரதியார் கூறிய கருத்து மிக உயர்ந்தது. எல்லா உயிர்களும் பஞ்ச பூதங்களும் அணுக்களால் ஆனது என்பதை உணர்த்துவதாகும். கொலை தவிர்த்தல் - புலால் மறுத்தல் என்பவை ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பறை சாற்றுபவை. கருணையே வடிவான வள்ளல் பெருந்தகை காண விரும்பிய உலகம் தற்போது வெளிப்பட்டுக் கொண்ருக்கிறது. ஒளி நிறைந்த உலகம் அமையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நம் வாழ்நாளிலேயே அமையும் எனத் தமதுரையை அடிகளார் நிறைவு செய்தார்.
சிராங்கூன் சாலை வள்ளல் கோவிந்தசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் கள மதியுரைஞர் வெ.புருஷோத்தமன் அறிமுக உரையாற்றினார். இந்து சபைத் தலைவர் தி.ஜோதிநாதன் நன்றி நவில விழா நிறைவு கண்டது. பெருந்திரளான ஆன்மிக அன்பர்கள் பங்கேற்று அனுபூதி பெற்றனர்
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement