Advertisement

டோக்கியோ தமிழ்சங்கத்தில் பொங்கல் விழா

டோக்கியோ : ஜப்பான்வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய 29ம் ஆண்டு பொங்கல் விழா ஜனவரி 13 ம் தேதி டோக்கியோ நகரில் உள்ள கசாய் மக்கள் அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரபல வானொலித் தொகுப்பாளரும் திரைப்பட நடிகருமான ஆர் ஜே பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழரின் தாய்மடியான கீழடி, ஜப்பானிய யுகமான ரேவா யுகத்தின் முதல் பொங்கல், தோக்கியோ நகரில் ஒலிம்பிக் பந்தயங்கள் நிகழும் வருடம் என்பது போன்ற சமகாலத் தலைப்புச்செய்திகள் விழாப் பதாகையை அலங்கரித்தன. டோக்கியோவின் முன்னணி உணவகமான கோவிந்தாஸ் வழங்கிய வாழையிலை விருந்துடன் மதியம் விழா துவங்கியது. டோக்கியோ மற்றும் அருகாமையில் வசிக்கின்ற 400 க்கும் மேற்பட்ட தமிழர்கள் அரங்கத்தில் ஒன்று கூடி பொங்கல் விழாவில் பங்கேற்றனர். மூன்று மணிநேரம் நடைபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகளில் சிறார்களின் ஆடல் பாடல், கருவியிசை, வாய்ப்பாட்டு, நாடகம் என்று தமிழர்களும் ஜப்பானியரும் இணைந்து பங்கு கொண்டது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பொங்கல் விழா மலர் ஜப்பானுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவால் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை ஆர் ஜே பாலாஜி பெற்றுக்கொண்டார். வாழ்த்துரை வழங்கிய இந்திய தூதர் பெருமளவில் மக்கள் திரண்டு வந்து இந்தியப் பண்பாட்டை, ஜப்பானிய இந்திய நல்லிணக்கத்தைப் பேணிக்காப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.தேநீர் இடைவேளைக்குப் பின்னர் விருந்தினர் நேரத்தில் தனக்கே உரிய பாணியில் பாலாஜி பார்வையாளர்களில் சிலரை மேடைக்கு ஏற்றி நகைச்சுவை விருந்தளித்து அரங்கத்தை சிரிப்பலைகளால் அதிர வைத்தார். அதன் பின் சிறப்புரை ஆற்றிய அவர் கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த சிறார்களின் முயற்சியை வாழ்த்திப் பேசி, தன் வாழ்க்கைப் பயணத்தை, வானொலித்தொகுப்பாளராக , நடிகராக உருவானது எப்படி என்பதை விவரித்தார். ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின் போதான தனது உரையை ஒரு ஜப்பானியர் நினைவு கூர்ந்து பேசியது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்றார். சமூக வலைத்தளங்களின் நன்மை தீமைகளை உணரவும் அவற்றை பயன்படுத்துவதில் அதிக எச்சரிக்கை தேவை என்பதையும் ஒரு ஊடகவியலாளருக்கான பொறுப்புணர்வுடன் விளக்கினார்.பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நேர்த்தியாகப் பதிலளித்த பாலாஜி இயல்பாகப்பேசிப் பழகியது பங்கு கொண்ட அனைவருக்கும் நிறைவளிப்பதாக அமைந்தது. அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்ற பிங்கோ விளையாட்டோடு விழா இனிதே நிறைவுற்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement