Advertisement

கோலாலம்பூரில் கோலாகல உலக அமைதி தின விழா

“ இஸ்லாம் என்றாலே அமைதி – சாந்தி – சமாதானம் . இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது சொல்லும் “ ஆலைக்கு சலாம் “ என்பதே இதை வெளிப்படுத்துகிறது. மலேசியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையோராக இருப்பினும் மத நல்லிணக்கத்தையும் – சமூக – இன – சமுதாய நல்லுறவையும் ஒற்றுமையையும் அரசு பேணிக் காத்து வருகிறது. இங்கே இந்த உலக அமைதி தின விழா நடைபெறுவது சாலப் பொருத்தம். .குருமகான் அவர்கள் தோற்றுவித்துள்ள இந்த ஒரு நிமிட அமைதி வேள்வி இன்றோடு முடிவதல்ல – நாள்தோறும் தனிநபர் அமைதி – குடும்ப அமைதி – தேச அமைதி – உலக அமைதியை நிலைநாட்டும் அற்புத விழாவாக உலக முழுவதும் பரவி சாந்தியையும் சமாதானத்தையும் நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை “ என கோலாலம்பூர் லிம் கோ விங் பல்கலைக் கழக அரங்கில் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட உலக அமைதி வேள்விப் பெரு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தொழிலதிபர் டான் ஸ்ரீ லீ குறிப்பிட்டார்.

மலேசியா முழுவதிலுமிருந்து பங்கேற்ற ஆயிரக் கணக்கானோர் “ நான் அமைதி காப்பேன் – குடும்ப அமைதி காப்போன் – தேச அமைதி காப்பேன் – உலக அமைதி காப்பேன் “ என சூழுரை எடுத்துக் கொண்ட காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து பல இன கலாச்சார நாட்டியம் இடம் பெற்றது. “ உலக அமைதி –சாத்தியமே “ என்ற காணொளி அடுத்த அங்கமாகத் திரையிடப்பட்டது. ஈரான் – கென்யா – சிரியா – பாலஸ்தீனம் – ஏமன் நாட்டு மாணவர்கள் பல்கலைக் கழகத்தைப் பிரதிநிதித்து சொற்பொழிவாற்றினர்.

அடுத்து திருமூர்த்தி மலை தென்கயிலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் தத்துவ தவ உயர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகாமகரிஷி குருமகான் பரஞ்ஜோதியாரின் உலக அமைதி தினச் சிறப்புச் செய்தி காணொளியாகத் திரையிடப்பட்டது. உலக அமைதி தின நினைவுச் சின்னம் பலத்த கரவொலிக்கிடையே திறந்து வைக்கப்பட்டது. சரியாக 11 மணி 11 நிமிடத்திற்கு பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று அமைதி தின உறுதி மொழி ஏற்றனர்.

அமைதி என்பது வெளியில் இல்லை. நமக்குள் இருப்பது.நம்மிடமிருந்து வெளிப்படுவது என்பதை உணர்த்துவதே இவ்விழா. இந்த அமைதி சங்கல்பத்தை மேற்கொள்ளும் போது நமது எண்ண அலைகள் இந்த அமைதி நிலையிலிருந்து மௌனமாக வெளிப்படுத்த அமைதி அலை பரவத் தொடங்குகிறது. கோலாலம்பூரில் இது வெளிப்படும்போது ஒவ்வொரு நாட்டிலுமுள்ளோர் அவ்வந்நாட்டு நேரப்படி 11 மணி 11 நிமிடத்திற்கு இப்பிரதிக்கிணையை வெளிப்படுத்தும் போது இந்நல்லெண்ண அலைகள் பிரபஞ்சம் முழுவதும் பரவி சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவது திண்ணம்.விழாவில் டான் ஸ்ரீ லிம் கோக் விங் – டான் ஸ்ரீ லீ கிம் இயூ – டான் ஸ்ரீ ரவீந்திர மேனன் – மலேசிய குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாது காப்புத் துணை ஆணையர் முகமது ஆரிஃப் பின் முகமது ஹனுதின் மற்றும் மலேசிய சர்வ மதத் தலைவர்கள் – தென்கயிலை உலக சமாதான ஆலய அறங்காவலர்கள் கே.விநாயகம் – பொதுச்செயலர் கே.எஸ்.சுந்தரராமன் மற்றும் பொறியாளர் திருச்சி சுப்பிரமணியம் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

2011 ஆண்டு முதல் நடைபெறும் இவ்விழாவின் தொடக்க நாளில் ஐ.நா.சபையின் சகோதர அமைப்பான யுனிவர்சல் பீஸ் பெடரேஷன் அமைப்பின் செயலாளர் நேரில் கலந்து கொண்டு குரு மகான் பரஞ்ஜோதியாருக்கு “ உலக அமைதித் தூதுவர் “ என்ற விருது வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். முன்னதாக “ தஸ்லி “ அமைப்பின் நிர்வாக இயக்குநரும் விழா ஏற்பாட்டுக் குழுப் பிரமுகருமான கேப்டன் ரவி வரவேற்புரை நிகழ்த்தினார். விழாச் செயலாளர் சுப்ரியா நன்றி நவில விழா நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement