Advertisement

சான் ஆண்டோனியோவில் நட்சத்திர அந்தஸ்துடன் அட்டகாசமான தீபாவளி

அக்டோபர் 19 ஆம் தேதி சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் தான் நட்சத்திர அந்தஸ்துடன் அட்டகாசமான தீபாவளி திருவிழாவை துவங்கி வைத்தது என்றே சொல்லலாம். ஊரே அதிரும்படியாக 'அவர் லேடி ஆஃப் தி லேக் யூனிவர்சிட்டியில்' உள்ள 'தெர்ரி' அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.

அரங்கத்தின் நுழைவாயிலில் ஆஸ்கர் ஸ்டைலில் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட வளைவுகள் மற்றும் 'சிவப்பு கம்பளம்' விரித்து விருந்தினர்களை வரவேற்றனர்.அரங்கின் வெளியே ஆடை,அணிகலன் விற்கும் தற்காலிக கடைகள் போடப்பட்டிருந்தன.

அரங்கத்தின் உள் வரவேற்பில் சந்தானம்,குங்குமம்,பழம்,கல்கண்டு மற்றும் பன்னீர் தெளித்து வரவேற்று, அனைத்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மணம் மிக்க மல்லிகை பூ, தலையில் வைத்துக்கொள்ள ஹேர் பின்னும் தந்து அசத்திவிட்டனர் அங்கு வரவேற்ற பெண்கள் !

முதல் ஒன்றரை மணிநேரத்திற்கு மாலை சிற்றுண்டி- சுவைமிக்க தேநீருடன் பக்கோடா வழங்கப்பட்டது. பின் தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தொகுப்பாளர்கள் சிறந்த முறையில் தொகுத்து வழங்கினர்.

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை மிகவும் வித்தியாசமான பிரமிக்கத்தக்க நடனங்கள் அளித்தனர். அவ்வகை நடனங்களுக்கு அவர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் மிகவும் பாராட்டப்பட்டது. தங்கள் நேரத்தையும்,உழைப்பையும் பலநாட்கள் செலவழித்து இத்தனை பாராட்டத்தக்க நிகழ்ச்சிகளை அளித்த அத்தனை பயிற்சியாளர்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள் ! பாடகர்கள் அழகான பாடல்கள் பாடி அசத்தினர். பல கருத்துக்கள் அடங்கிய நாடகம் அரங்கேறியது.

தமிழ்ச் சங்கத்தில் நடந்து முடிந்த ஆம்பலாப்பட்டு 'குறிச்சி ஏரி' நிதிநிவாரண பணியின் நடவடிக்கைகள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட்டது. அக்கிராம மக்கள் கூறிய நன்றியுரை காணொளியும் காட்டப்பட்டது.

2018 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் இதழான 'மல்லிகை மலர்' இதுவரை ஆன்லைன் பதிப்பாகவே இருந்தது, இப்போது அச்சுப்பிரதியாக, புத்தகப் பதிப்பாக மேடையில் வெளியிடப்பட்டது. பின் சங்க உறுப்பினர்களுக்கு பரிசாகவும் வழங்கப்பட்டது.

இத்தீபாவளி நிகழ்ச்சி சில பிரமாண்டங்களை பிரதிபலித்தது. அதில் ஒன்று எல் ஈ டி ஸ்க்ரீன் ! அரங்கத்தின் மேடையில் இந்த ஸ்க்ரீனில் பளீரென நிகழ்ச்சியில் பங்குபெறும் நிகழ்ச்சியாளர்களின் படங்களும்,நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட படங்களும் ஒளிபரப்பப் பட்டன. பின்னணியில் தீபஒளியும்,வண்ணப்பட்டாசுகளும் வந்துகொண்டே இருந்தது காணக்கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது.

அடுத்த பிரமாண்டம் தன்னார்வலர் கூட்டம். எச்சங்கத்திலும் இல்லாத தன்னார்வலர்கள் ஒத்துழைப்பு இச்சங்கத்திற்கு ஓர் பெருந்துணை !

பள்ளி மாணவர்களில் இருந்து பெரியவர்கள் வரை மிகுந்த சுறுசுறுப்புடனும், மகிழ்வுடனும்,ஒற்றுமையுடனும் செயல்பட்டது, இந்நிகழ்ச்சி இத்தனை சிறப்பாக நடைபெற முக்கிய காரணம் ஆகும். தமிழ்ச் சங்கம் சார்பாக அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள் !

‘ஸ்பைஸ் ரெஸ்ட்டாரெண்ட்டில்’ இருந்து வரவழைக்கப்பட்டு மிக அமர்க்களமான சைவ மற்றும் அசைவ இரவு விருந்து வழங்கப்பட்டது. டி ஜே இசை விருந்தும் அனைவரையும் குதூகலப்படுத்தி நீண்ட நேரம் ஆட வைத்தது. சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி ஸ்வீட்ஸ் மற்றும் மல்லிகை மலர் போடப்பட்ட பைகள் வழங்கினர்.

பல மாதங்களாய் யோசித்து, திட்டமிட்டு அதனை நன்கு செயல்படுத்திக்காட்டிய சங்கத் தலைவர் திரு.கார்த்திகேயன் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் அனைவருமே பாராட்டுக்கு உரியவர்கள்.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,

ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு'

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement