Advertisement

பிரமிக்க வைக்கும் அமெரிக்க ஹாஸ்பிஸ் சேவை

வருடம் 2005 - அப்பா திரு. என். எஸ். இராமச்சந்திரனுக்கு வயது 88. அம்மா திருமதி. ஸ்வர்ணலஷ்மிக்கு 80. அவர்கள் தம் வயதைப் பொருட்படுத்தாமல், சொந்த ஊரான மானாமதுரையில் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு, மகிழ்ச்சியுடன் சுதந்திர வாழ்க்கை வாழ்ந்த தருணம்.
குழந்தைகள் ஒன்பதில் நாங்கள் ஐவர் அட்லாண்டாவில். “இவ்வளவு காலம் நீங்கள் தனியே இருந்தது போதும், அமெரிக்கா வந்து எங்களுடன் மாறி மாறி இருங்கள்” என்ற எங்கள் அன்பு வற்புறுத்தலுக்கு இணங்கி, அவர்கள் இங்கு வந்ததில் எங்களுக்குப் பரம சந்தோஷம்.
நாளடைவில் அவர்களுக்குப் பச்சை அட்டை, மெடிகெய்ட் (Medicaid) போன்றவை வந்து விட்டன. ஊர் நண்பர்கள், உறவினர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் தொலைபேசியில் பேசி வருவார்களே தவிர, “ஏன் வந்தோம், இங்கு ஒத்து வரவில்லை, திரும்ப வேண்டும்” என்ற அங்கலாய்ப்பே இல்லை. இங்குள்ள பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டு, இங்கும் தமக்கான நண்பர்களை (முகநூல் உட்பட!) ஏற்படுத்திக் கொண்டு, 12 வருடங்களை ஓட்டி விட்டார்கள்.

அம்மாவிற்கு ஒரு வயிறு அறுவை சிகிச்சைக்குப் பின், கடைசியில் சில வருடங்களுக்கு அதிகம் நடமாட முடியவில்லை. கண் பார்வையும் மங்கி வந்தது. நாங்கள் அவரவர் வேலையில் ஓடிக் கொண்டிருக்க, கிட்டத்தட்ட தம் 100வது வயது வரை அவருக்கு ஊன்றுகோலாக இருந்தவர் அப்பா தான்.
அப்பாவிற்குப் பல வருடங்களாகக் குடல் இறக்கம். அவர் வயது காரணமாக அறுவை சிகிச்சை செய்வது உசிதம் இல்லை என்பதால், அவரும் சமாளித்து வந்தார். ஆனால் இந்த உபாதை அதிகரிக்கவே, வேறு வழியில்லாமல் மார்ச் 2017 இறுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
குடல் பிரச்சனை தீர்ந்தது. ஆனால் அறுவை சிகிச்சையின் பின்விளைவுகள் தலை தூக்கின. நிமோனியா, இதய இயக்கக் குறைவு, உடல் வீக்கம், வலி, இருமல், வயிற்றுக் கோளாறு என்று தொடர்ந்து ஒரு மாதம் அவதிப்பட்டார். அவர் வியாதி பாராட்டி நாங்கள் பார்த்ததே இல்லை. எதையும் தம் மனத்திண்மை, நகைச்சுவையான பேச்சு இவற்றால் எதிர்கொண்டு விடுவார். ஆனால் இம்முறை எல்லாம் கைமீறிப் போயின. அவர் பட்ட வேதனை மனதைப் பிழிந்தது.
அம்மாவிற்கு, அப்பாவுடன் 81 வருட வாழ்க்கை. அம்மாவின் உடல்நிலையை முன்னிட்டு, அவரை ஒரு முறைதான் மருத்துவமனைக்குக் கூட்டிப் போய்க் காண்பித்தோம். நடைமுறைச் சிரமங்களைப் புரிந்து கொண்டு, அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று சொல்லாமலே இருந்து விட்டார்.நோய் முற்றி விட்டது, மருத்துவம் பலனளிக்காது, மீதமிருக்கும் வாழ்நாள் விரல் விட்டு எண்ணப்படுகிறது அல்லது ஆறு மாதத்துக்குள் முடிந்து விடும் என்ற நிலைமை உருவானால், ஹாஸ்பிஸ் (Hospice - இறுதிக்கட்டப் பிணியாளர்கள் பேணகம்) என்ற வசதியை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள், இதற்கான செலவை, அநேகமாக முழுவதையும், மருத்துவக் காப்பீடு பார்த்துக் கொள்ளும். இவ்வசதியை இதற்கான மருத்துவமனையிலோ, நம் வீட்டிலேயோ எடுத்துக் கொள்ளலாம்.
ஹாஸ்பிஸின் நோக்கம், முற்றிய நோயைக் குணப்படுத்துவது அல்ல. மாறாக, நோயாளிகளின் உடல் உபாதையைத் தணித்து, இயற்கையின் நியதியான வாழ்வின் முடிவை, அவர்களை எவ்வாறு அதிக மன அழுத்தம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளச் செய்யலாம், அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஆன்மீகச் சேவைக்கு ஏற்பாடு செய்யலாம், குடும்பத்தாருக்கு ஆறுதல் வார்த்தை கூறலாம் என்பதே ஆகும்.
நாங்கள் வீட்டு ஹாஸ்பிஸுக்கு விருப்பம் தெரிவித்தோம். அப்பா, வீட்டுச் சூழ்நிலையில் இருப்பது அவருக்கு நிம்மதியைத் தரும். அம்மா கூட இருப்பார். உறவினர்கள், நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். நமக்கும் வீட்டிலேயே பார்த்துக் கொள்வது வசதி.
அப்பாவிற்கு மருத்துவமனை விடுவிப்பு (discharge) கிடைத்து, வீட்டுக்கு வருவதற்குள், ஏற்றி இறக்க வசதியான மருத்துவமனைக் கட்டில், மெத்தை, விரிப்புகள், நடைவண்டி, சக்கர நாற்காலி, ஆக்ஸிஜன் உபகரணம், வடிகுழல் (catheter), மருந்து மாத்திரைகள், இடையாடை (diaper), சுத்தம் செய்யும் துகில்கள், பசைகள் என ஏகப்பட்ட சாமான்கள் சகிதம் பணியாளர்களும், தாதியும் வந்து விட்டனர்.

சத்தமில்லாமல், நாம் சொல்லும் இடத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாக வைத்தார்கள். தாதி, பொறுமையுடன் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். வெகு நேரம் கூட இருந்து விட்டுப் போனார்.

தினமும் காலையில் ஒரு பணியாளர் வந்து, அப்பாவிற்குத் துடைத்து விட்டு, விரிப்புகளை மாற்றிச் செல்வார். தாதி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவார். தேவைப்பட்டால் நாம் தினமும் வரச் சொல்லலாம். தொலைபேசியில் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

ஓர் இரவு, அப்பாவிற்குத் தொந்தரவாக இருந்ததால், பொருத்தப்பட்ட வடிகுழலை நீக்க வேண்டி இருந்தது. நான் தாதியைக் கூப்பிட்ட போது பின்னிரவு ஒரு மணி. மழை வேறு. அப்படி இருப்பினும், முகம் சுளிக்காமல் மூன்று மணிக்கு வந்து விட்டார் தாதி. ஹாஸ்பிஸ் வேலையை எடுத்துக் கொள்ள, உண்மையான சேவை மனப்பான்மையும், மனித நேயமும் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.

இவ்வாறாக, ஒன்பது நாட்கள் ஓடின. மே 4, 2017 - அப்பா, அம்மாவின் 81வது திருமண நாள். அன்று அப்பாவின் வாழ்வு நிறைவுற்றது. அவரது 100வது வயது பூர்த்தியடைய 100 நாட்களே பாக்கி இருந்தன. அதற்கு அவர் இல்லையே என்று மனம் சற்று ஏங்கினாலும், இவ்வளவு வயது வரை அவர் எங்களுடன் இருந்ததே கிடைத்தற்கரிய பெரும் பேறு என்று சமாதானம் செய்து கொண்டோம்.

அப்பாவின் முடிவு, தாதி வந்திருந்த சமயம் நிகழ்ந்தது. அவர் தேவையான ஆவணங்களை நிறைவு செய்து, மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளுக்கான வழிமுறைகளை விளக்கினார். பிறர் சாப்பிட்டால் ஆபத்து விளைவிக்கக் கூடிய எல்லா மருந்து மாத்திரைகளையும் உடனடியாக அப்புறப் படுத்தினார். வேறு பணியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கவலை தெரிவித்து விட்டுச் சென்றார்கள். இரண்டு நாட்கள் கழித்து, ஹாஸ்பிஸ் சாமான்களை எடுத்துச் சென்றார்கள்.

அம்மாவிற்கு, அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்து கவனித்ததில் மிகவும் திருப்தி. அந்தத் திருப்தியுடன், எதிர்பாரா விதமாக அடுத்த மூன்றே மாதத்தில் அப்பாவுடன் சேர்ந்து விட்டார்.

ஹாஸ்பிஸ் நிறுவனத்திலிருந்து சில விசாரிப்புத் தொலைபேசிகளும், கடிதங்களும் ஒரு வருடம் வரை வந்து கொண்டிருந்தன. நிறுவன அதிகாரிகள், இத்தகைய இழப்பிலிருந்து, குடும்பத்தார் மனரீதியாக மீண்டு வர உதவி வேண்டுமானால், ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தார்கள்.

நமக்கு அமெரிக்காவில் ஏற்படும் அனுபவங்கள் பற்பல. அவற்றுள் என்னைப் பிரமிக்க வைத்தது, தரமான, மகத்தான இந்த ஹாஸ்பிஸ் சேவை!

- தினமலர் வாசகி ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா, ஜார்ஜியா

p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; text-align: justify; font: 12.0px Helvetica; color: #000000; -webkit-text-stroke: #000000} span.s1 {font-kerning: none} p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; text-align: justify; font: 12.0px Helvetica; color: #000000; -webkit-text-stroke: #000000} span.s1 {font-kerning: none} p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; text-align: justify; font: 12.0px Helvetica; color: #000000; -webkit-text-stroke: #000000} span.s1 {font-kerning: none} p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; text-align: justify; font: 12.0px Helvetica; color: #000000; -webkit-text-stroke: #000000} span.s1 {font-kerning: none} p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; text-align: justify; font: 12.0px Helvetica; color: #000000; -webkit-text-stroke: #000000} span.s1 {font-kerning: none}

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement