Advertisement

93 - அமெரிக்கா டூ கருமாத்தூர்

பல்வேறு திசை மாறிப்போன வாழ்க்கை, எண்ணங்கள் எங்கெங்கோ பரவிப்போன வாழ்க்கை, தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்ளும் வாழ்க்கை,அவரவர் வாழ்க்கை-அவரவர் பாதை. எங்கோ மனதின் மூலையில் தன் நண்பனை ,தோழியை நினைவூட்டும் ஞாபகங்கள்! தன் பிள்ளைகளின் கல்வியில்,தன் ஆசிரியரை அடிக்கடி நினைவு கொள்ளும் தருணங்கள்.


வெகுசிலரை மட்டுமே சொந்த மண்ணில் பார்க்கமுடிந்த சந்தர்ப்பங்கள். கண்கள் சந்தித்தாலும் பேசிக்கொள்வதோ மற்ற தோழர்களை பற்றி ! அவனைப் பாக்கலையே, இவன் என்ன செய்கிறான் என திருப்தி இன்றி கடல் கடந்து ஊர் திரும்பும் மனது. நாம் சந்தித்தால் என்ன என்று பலநாள் நினைத்து அதனைத் திட்டம் போட்டு,அமெரிக்காவிலிருந்து மதுரைக்குப் பறந்திருக்கிறார் சான் ஆண்டோனியோவைச் சேர்ந்த இராஜகுரு.மதுரை-கருமாத்தூர் செயின்ட்.கிலாரெட் உயர்நிலைப் பள்ளியில் படித்த இராஜகுரு, தன் நண்பர்களுடன் செய்த ஏற்பாடே இந்த மலரும் நினைவுகளின் ஒன்றிணைப்பு !

93 பேட்ச் நண்பர்களைத் தொடர்பு கொண்டு, செய்தி அனுப்பி, சந்திக்கும் இடம் தேர்வு செய்து, ஆசிரியர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி, அவர்களை உரிய மரியாதைகளுடன் வரவேற்று நன்றி பாராட்டினர்.


இராஜகுரு,ஆசிரியர்களுக்கு அமெரிக்காவிலிருந்தே கை கடிகாரங்களும், ஹேண்ட் பேக்குகளும் பரிசுகளாக வாங்கி வந்தார். மேலும் நினைவுப் பரிசுகளும்,சால்வைகளும் அளித்தும் சிறப்புச் செய்தனர்,இப்பழைய மாணாக்கர்கள்.


பலவருடக் கதைகள் நண்பர்களுடன் பேசி, குழாவி, பெரும் விருந்து படைத்து, சேர்ந்தே உண்டு மகிழ்ந்து, மறந்துபோன குறும்புகளை நினைவுபடுத்தி, பிறர் நலம் விசாரித்து, விட்டுப் போன நம் நட்பு இனி நாம் வாழும் காலம் முழுதும் தொடரவேண்டும் என்று உள்மனதோடு ஒப்புக்கொண்டு ஆசைதீர அந்த நாளை நண்பர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


நட்பினை கடவுள் தந்த வரமாக ஏற்று, தத்தம் வாழ்க்கையை சுயநலமாக மட்டுமே வாழாமல்,உன் சுக துக்கங்களில் நான் இருக்கிறேன் என உறுதிப்படுத்திக் கொண்டது இந்நட்புக் கூட்டம் ! சில நண்பர்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து இம்மாதிரி உதவிகள் அளிக்க திட்டம் மேற்கொண்டனர்.


நேசத்திற்கு தூரமில்லை என அமெரிக்காவில் இருந்து வந்து தோழர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்து மகிழ்ந்த இராஜகுருவிற்கு, நட்பு பாரமில்லை என தோழமையுடன் தோள் கொடுத்த இந்த நட்புக்கூட்டத்தை பாராட்டியே ஆகவேண்டும்!


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement