Advertisement

நியூ ஜெர்சியில் குழந்தைகளுக்கான தமிழ் போட்டி

கடல் கடந்து வாழ்ந்தாலும், தமிழ்ப்பள்ளிகள் மூலம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்குத் தமிழை ஒரு மொழியாக அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியே குழந்தைகளுக்கான தமிழ் போட்டிகள். இதன் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழியில் மேடையில் பேச ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி, தொடர்ந்து அவர்கள் தமிழ் மொழியினை படிக்க ஊக்குவிக்கும் முயற்சியை திருவள்ளுவர் தமிழ் பள்ளி அமெரிக்காவில் வருடந்தோறும் செய்து வருகிறது .

நியூ செர்சியில் உள்ள எடிசன் திருவள்ளுவர் தமிழ் பள்ளியின் 2019 ஆம் ஆண்டிற்கான குழந்தைகளுக்கான போட்டிகள் பிப்ரவரி 23, சனிக்கிழமை காலை 9:15 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பங்கேற்பாளர்களையும், பெற்றோர்களையும் மற்றும் தன்னார்வலர்களையும் முதல்வர் சாந்தி தங்கராசு வரவேற்று, பிரிட்ஜ்வாட்டர் தமிழ்ப் பள்ளியிலிருந்து காலை நேரப் போட்டிகளுக்கு நடுவர்களாய் வந்திருந்த ஆசிரியர்கள் நிர்மலா சரவணன், இலட்சுமி பிரியா அருணாசலம், யமுனா பிரியா அருள்மணி ஆகியோரை அறிமுகப் படுத்தினார்.

போட்டியின் விதிமுறைகள் நடுவர்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்கிய பின்னர் போட்டிகள் துவங்கியது. முதல் போட்டியாக 7 வயது குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் தொடங்கியது. குழந்தைகள் அனைவரும் தங்களுக்கு தரப்பட்டுள்ள குறட்பாக்களை பிழையின்றி மிகத் தெளிவான உச்சரிப்புடன் மேடையில் கூறியது நடுவர்களை மட்டுமல்லாது பெற்றோர்களையும், தன்னார்வ ஆசிரியர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து 8 வயது குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி தொடங்கி வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

பிறகு 3-4 வயது குழந்தைகளுக்கான 'பொருளை காண்பித்த்து ஒரு நிமிட உரையாற்றல்' போட்டி தொடங்கியது. குழந்தைகள் அனைவரும் தங்களுக்கு பிடித்த ஒரு பொருளை கொண்டு வந்து மிக அழகான மழலை மொழியில் உரையாற்றியது அனைவரையும் கவர்ந்தது. யானை, நாய், பூனை, தேசியக்கொடி , திருவள்ளுவர் என குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தவற்றை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து 12 வயது குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி தொடங்கியது. ஏற்கனவே கொடுக்கப் பட்டிருந்த 25 வார்த்தை தலைப்புகளிலிருந்து தனக்கு மேடையில் போட்டி நடுவார்களால் தரப்படும் ஒரு வார்த்தையைப் பற்றி இரண்டு நிமிடம் பேசவேண்டும்.. மிகச் சிறப்பாக குழந்தைகள் தாங்கள் தயார் செய்து வந்த உரைகளை தெள்ளத் தெளிவாக பகிர்ந்து கொண்டார்கள்.

காலை நேரப் போட்டிகள் திட்டமிட்ட படி முடிந்த பின் நடுவர்களுக்கு சிறு பரிசு தந்து சிறப்பு செய்து நன்றி கூறினார் பள்ளியின் துணைமுதல்வர் இலட்சுமிகாந்தன் சுந்தர்ராசன். இத்தருணத்தில், பள்ளியின் 2017-18க்கான ஆண்டு மலரை கார்த்திக் காவேரிசெல்வன் தொகுத்து வெளியிட, பிரிட்ஜ்வாட்டர் ஆசிரியைகள் பெற்றுக் கொண்டனர். உணவு இடைவேளைக்குப் பின், மதிய நேரப் போட்டிகளுக்கு நடுவர்களாயிருக்க இசைந்து சவுத் பிருன்ஸ்விக் தமிழ்ப் பள்ளியிலிருந்து வந்திருந்த பார்கவி வெங்கடேசன், எடிசன் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர் கதிரவன் லோகநாதன் மற்றும் ஆர்வலர் கார்த்திக் காவேரிசெல்வன் ஆகியோரை வரவேற்று பார்வையாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் அறிமுகப் படுத்திய பின் போட்டிகள் ஆரம்பமாயிற்று.

9 வயது குழந்தைகளுக்கான திருக்குறள் பொருளுடன் ஒப்புவிக்கும் போட்டி தொடங்கியது. முன்னரே பகிர்ந்து கொண்டிருந்த பொருளுடன் கூடிய 30 குறட்பாக்களிருந்து 2 மணித் துளிகளுக்குள் அதிகம்சொல்பவரே வெற்றியாளர். இந்த போட்டியிலும் பொருளுடன் 20 குறட்பாக்களை வெகுச் இலகுவாக குழந்தைகள் ஒப்புவித்தர்கள் . கலைஞர் மற்றும் சாலமன் பாப்பையா அவர்களின் உரைகளில் இருந்து அவர்கள் படித்து சரியாக அதை ஒப்புவித்தது உண்மையில் மகிழ்ச்சியை தந்தது. அதே போன்று 10 வயது குழந்தைகளுக்கான பொருளுடன் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியிலும் மிகச் சிறப்பாகச் சிறார்கள் பேசினார்கள்.

தொடர்ந்து 5 வயது குழந்தைகளுக்கான பாரதியார் ஆத்திச்சூடி மனனப் போட்டியில் மழலைகள் அனைவரும் வியக்கும் வண்ணம் ஆத்திச்சூடியை பிழையின்றி ஒப்புவித்தது காண்போரை களிக்கச் செய்ததெனில் அது மிகையல்ல. பிறகு 6 வயது குழந்தைகளுக்கான வார்த்தை விளையாட்டு மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. தங்களுக்கு ஏற்கனவே தரப்பட்டுள்ள சொற்களை மாணவர்கள் மனப்பாடம் செய்து வந்தனர். மேடையின் நடுவர்கள் எழுத்தைச் சொன்னவுடன் அந்த எழுத்தில் தொடங்கும் பல சொற்களை மடமடவென ஒப்புவித்தது குழந்தைகளின் சொல் வளத்தை வெளிக்கொணர்ந்தது.

சிறு தேநீர் இடைவேளைக்குப் பின், இறுதியாக 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் கவிதை ஒப்புவித்தல் போட்டி தொடங்கியது. மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கவிஞர் தாராபாரதி ஆகியோரின் கவிதைகளிலிருந்து ஏதேனும் இரண்டு கவிதைகளை குழந்தைகள் தேர்ந்தெடுத்து ஒப்புவிக்க வேண்டும். மிகச் சிறப்பாக ஏற்ற இறக்கங்களுடன் மடை திறந்த வெள்ளம் போல கவிதை நயத்துடன் மாணவர்கள் பாராமல் ஒப்புவித்தது உணர்ச்சி பூர்வமாக இருந்தது.. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் தரப்பட்டன. முதல் மூன்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு , சான்றிதழ்களும், சிறு தொகையும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை பள்ளியின் முதல்வர் சாந்தி தங்கராசு அவர்களும், துணை முதல்வர் இலட்சுமிகாந்தன் சுந்தர்ராஜன் அவர்களும், பொருளாளர் செந்தில் முத்துசாமி அவர்களும் வழங்கினார்கள்.

ஒவ்வொரு போட்டியின் முன்பும் விதிமுறைகள் தெளிவாக அறிவிக்கப்பட்டது. போட்டியின் அளவு கோள்களாக உச்சரிப்பு, கருத்து, தெளிவு, பேச்சு நடை, கால அளவு ஆகியவை பின்பற்றப் பட்டது. மாணவர்கள் போட்டிகளில் அசாத்தியமாக பங்கேற்று தம் செயல்திறன்களை வெளிப்படுத்தியது நடுவர்களை வியக்க வைத்தது. பங்கேற்பாளர்களை முதல் மூன்று இடங்களுக்கு மதிப்பீடுவது மிகவும் சவாலாகவே இருந்தது என்றனர் நடுவர்கள். மதிப்பெண் ஒன்றுக்கும் குறைவாக வேறுபட்ட மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப் பட்டது. வேறுபடுத்த முடியாத நிலையில் பரிசுகள் இரட்டிப்பாகியது.

காலை 9 மணி தொடங்கி மாலை 04:30 மணிவரை நடந்த இவ்வருடப் போட்டியில் சுமார் 130 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில், தமிழ்ப்பள்ளியின் பொருளாளர் செந்தில்நாதன் முத்துசாமி போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களையும், அவர்களுக்கெல்லாம் சிறப்பாக பயிற்சியளித்த பெற்றோர்களையும் பாராட்டினார். போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்க உதவிய நடுவர்களுக்கு சிறப்பு நன்றிகள் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு ஒலி வடிவமைத்து நாள் முழுதும் உதவிய இளங்கோவன் சௌந்தரராஜன், ராஜேஷ் பன்னீர்செல்வம் ஆகியோருக்கும், நிழற்படங்கள் எடுத்துதவிய விஜயகுமார், சுப்ரமணியன் ஆகியோருக்கும் நன்றி கூறினார்.

போட்டிகள் தங்கு தடையின்றி சீராக நடைபெற உதவிய மற்ற அனைத்துத் தன்னார்வ தொண்டர்களுக்கும், தொகுப்பாளர்களுக்கும், மதிப்பீட்டாளர்களுக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றி பாராட்டினார். 2010-ஆம் ஆண்டு இலாபநோக்கற்ற அமைப்பாக நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி நியூ செர்சி வாழ் தமிழ் மக்களின் தமிழ் தேவைகளை கடந்த 8 ஆண்டுகளாக குறிப்பாக, குழந்தைகளின் தமிழ் கற்றலை ஊக்குவித்து நிறைவு செய்து வருகிறது. 2018-19 கல்வி ஆண்டில் சுமார் 670 மாணவர்கள் படிக்கிறார்கள். வெளிநாட்டில் வளர்ந்து வரும் வம்சாவளி தமிழ்க் குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று தமிழ்திறன்களை திறம்பட வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

- தினமலர் வாசகர்கள் கனிமொழி ம வீ சாந்தி தங்கராசு

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement