Advertisement

லேகோஸில் பங்குனி உத்திரம்

லேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமிக்கு பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு மார்ச் 17 ஞாயிறு அன்று துவங்கியது. சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களும் பால் குடம், காவடி எடுத்து தங்கள் இஷ்ட தெய்வம், குல தெய்வத்திற்கு மனமுருகி பிரார்த்தனை செய்தனர். பங்குனி உத்திரம் இந்த வருடம் மார்ச் 21ம் தேதி அலுவல் நாளில் வருவதால், தமிழ் குடும்பங்களில் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக ஞாயிறு அன்று சிறப்பு வழிபாட்டை நடத்தியது லேகோஸ் முருகன் கோவில் குழுமம். மார்ச் 21ம் தேதியும் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஆரத்தி நடைபெறும் என்று தெரிவித்துக் கொண்டார்கள்.
காலை 9 மணிக்கு பால் குடம் காவடிக்கு கணபதி பூஜையுடன் துவங்கிய இந்த விழா சுமார் 12 30 அளவில் சிறப்பு அபிஷேகம், ஆர்த்தி மற்றும் லங்கர் பிரசாதம் வழங்கியதோடு இனிதே நிறைவுற்றது. சுமார் 200 குடும்பங்கள் இதில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
பூஜை செய்யப்பட்ட பால் குடங்களை பக்தர்கள் கோவிலை வலம் வந்து முருகன் சன்னதியில் சமர்ப்பிக்க முருகனுக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதனை தொடர்ந்து ஆகம விதிப்படி மற்ற அபிஷேகங்களும் நடைபெற்றது. முருகன் சன்னதி முன் ஸ்கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், மற்றும் முருகன் சிறப்பு பாமாலைகள் பாடப்பட்டது.

முருகனுக்கு அலங்காரம் செய்யும் வேளையில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகி இருந்தது. திருமதி மஹாலக்ஷ்மி சிவசங்கர் அவர்களிடம் கர்நாடக சங்கீதம் பயிலும் மாணவிகளின் இசை கச்சேரியும், திருமதி ராதா எத்திராஜ் அவர்களிடம் பரதநாட்டியம் பயிலும் மாணவிகளின் கணேஷ துதி மற்றும் முருகன் கௌத்துவம் ஆகிய நடனங்கள் ஆடி மங்களத்துடன் இந்த கலை நிகழ்ச்சியை பூர்த்தி செய்தனர்.
இதற்குள் திரு சிவகுமார் சிவாச்சாரியார் முருகனை விபூதி காப்பு, தங்க கவசம், ராஜ அலங்காரத்தில் அழகாக வடிவமைத்திருந்தார். சிறப்பு வழிபாடு ஆரத்தி செய்த தருணம் முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பி பரவசத்தில் ஆழ்ந்தனர். அகமும் புறமும் முருகனிடம் லயிக்க சிந்தை ஒன்றில் அவன் உரு மட்டும் நிறைந்திருந்தது.


- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement