Advertisement

கஜா சேதத்திற்கு அன்புடன் கை கொடுக்கும் கை- சான் ஆண்டோனியோ

உலகமெங்கும் நம் தமிழ் மக்கள் சமீப காலத்தில் துக்கப்பட்ட விஷயம் ,தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்திய சர்வ நாசம் பற்றித்தான்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நம் சகோதர சகோதரிகள், வாழும் வீடிழந்து, வருமானம் தரும் விவசாயம் இழந்து, பல உயிர்களையும் இழந்து, கிட்டத்தட்ட நடுத்தெருவில் நின்ற நிலை தான். எங்கோ நடக்கிறது, கடல் கடந்து வந்த நமக்கென்ன என்றில்லாமல் ஏதாவது செய்ய வேண்டும், நம் மக்களின் வாழ்க்கையைத் திருப்பித் தரவேண்டும் என்ற வெறியும்,வேட்கையும் தான் இன்று சான் ஆண்டோனியோவில் நம் மக்கள் காட்டிய ஒற்றுமை!

ஜனவரி 5 ஆம் தேதி, இங்குள்ள IASA ஹாலில் கஜா புயலுக்கு நிவாரண நிதி திரட்ட,'மொய் விருந்து' நடந்தது. கிட்டத்தட்ட 7000 டாலர்கள் வரை நிதி அளித்துள்ளனர் நம் மக்கள் !

சான் ஆண்டோனியோவில் உள்ள உணவகங்கள்- மதுரை மெஸ், ஸ்பைஸ், இந்தியா சாட் ஹவுஸ், முஸ்தபா குரோசரி ஷாப் முன்வந்து உதவினர். இங்கிருக்கும் ஸ்ரீ சாய் பாபா கோவில் தன்னார்வர்கள், சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம், இந்தியன் அசோஸியேஷன், மேலும் தனிப்பட்ட முறையில் நம் தமிழ் மக்களின் நிதிஉதவி மற்றும் தெலுகு சங்கம், இவர்களோடு மன் பசந்த் குரோசரி முக்கிய ஸ்பான்சராக உதவி செய்தனர். இப்படி மனமுவந்து அளிக்கப்பட்ட நிதிகள், தமிழ்நாட்டில் டெல்டாப் பகுதிகளை சார்ந்த முக்கிய 5 பொறுப்பாளர்களிடம் அனுப்பப்பட்டு, மரக்கன்றுகள் வாங்கி,மரங்கள் வளர்க்க இந்நிதி பயன்பட உள்ளது.

சான் ஆண்டோனியோவில் உள்ள தொடக்கப்பள்ளியிலிருந்து,உயர்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளின் உதவிகள் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று! ஸ்கவுட் மாணவிகள், நிறைய தன்னார்வலர்கள் என நிறைய நல்ல உள்ளங்கள் பங்கேற்றனர். இதனை முறைப்படி திட்டம் போட்டு, நடைமுறைப் படுத்தியதில் ராம், சுபா, ஐஸ்வர்யா, ஸ்மிதா, சரண், குமார் மற்றும் பலரின் பங்கு இன்றியமையாதது.

அன்று வாட்சப்பிலும், முகநூல் மூலமும் நேரடி ஒளிபரப்பும் செய்து நம் தமிழ்நாட்டு மக்களும் நேரலையில் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக, நம் தன்னார்வலர்கள் செய்தது மிகச் சிறப்பு !

“இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்

ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்


கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்


கதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும்


உன்னத ஆரிய நாடெங்கள் நாடே


ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே!”


என்ற பாரதியின் வாக்கை உணர்ந்தவர்காயிற்றே நம்மவர்கள் ! பிறர் துயர் துடைப்போர்,மேன்மக்கள் மேன்மக்களே !

-நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement