Advertisement

சிங்கப்பூரில் ஸ்ரீ சுவாமி ஐயப்பன் – இருமுடித் திருவிழா; வெள்ளிரத திருவீதி உலா

சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் சுவாமி ஐயப்பனுக்கு இருமுடித் திருவிழாவும் இலட்சார்ச்சனையும் பூர்ணாபிஷேகமும் வெள்ளிரதத் திரு வீதி உலாவும் ஜனவரி 4 – 5 – 6 தேதிகளில் கோலாகலமாக நடைபெற்றன. இருமுடித் திருவிழா சங்கல்பம் – கலச பூஜை – ஸ்ரீ ஐயப்பன் காயத்ரி மந்திர ஜபம் – ஹோமம் என வெகு விமரிசையாக நடைபெற்று “ சுவாமியே சரணம் ஐயப்பா “ என்ற சரண கோஷத்திற்கிடையே மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் இருமுடி கட்டப்பட்டு ஐயப்பமார்கள் ஆலயம் வலம் வந்து வழிபட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ஐயப்பனுக்கு இருமுடி நெய் அபிஷேகமும் சிறப்பு பூஜையும் பின்னர் மகேஸ்வர பூஜையும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றன. நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் விக்னேஸ்வர பூஜையும் கலச ஸ்தாபனமும் கலச பூஜையும் நடைபெற்றன. மூன்று கால இலட்சார்ச்சனையை வேத விற்பன்னர்கள் இயற்றினர். ஐயப்ப சுவாமிக்குப் பூர்ணாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. யாத்ரா தானமும் செய்யப்பட்டது.

ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித கடம் ஆலயம் வலம் வரப்பெற்று கலசாபிஷேகம் நடைபெற்றது. சுவாமி ஐயப்பன் மண்டல பூஜை நிறைவு விழாவாக சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளி சுவாமி ஐயப்பன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். பக்தப் பெருமக்கள் ஆங்காங்கே விசேஷ பந்தல் அமைத்து வரிசை சமர்ப்பித்து வழிபட்டனர். இப்பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆலய மேலாண்மைக் குழுவினர் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement