மாணவர்களுக்கான ராமானுஜம் கணிதப்பூங்கா
கோவை: மாணவர்களிடம் கணித திறனை மேம்படுத்தும் விதமாக, வ.உ.சி., பூங்கா வளாகத்தில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில், ராமானுஜம் கணிதப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.இன்றைய தலைமுறையினர் பெரும்பாலான சமயங்களில் மொபைல் போன், இணையத்தில் மூழ்கி நேரத்தை வீணடித்து வருகின்றனர். இதனால், அவர்களது கல்வி மட்டுமின்றி அறிவு சார்ந்த விஷயங்களிலும், சுணக்கம் ஏற்படுகிறது.இந்நிலையில், இப்பிரச்சனையில் இருந்து அவர்களின் கவனத்தை திசைத்திருப்ப, டாடாபாத் பகுதியில், 20 சென்ட் பரப்பளவில், மாநகராட்சி அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உலக உருண்டை, சுழலும் பெரிஸ்கோப், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரி என, சிந்திக்க துாண்டும் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.அதேபோல், விஞ்ஞானம், ஆராய்ச்சியில் ஆர்வத்தை துாண்டும் விதமாக, சரவணம்பட்டியில், சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், கணிதம்ஆகியன சார்ந்த, ஸ்டெம் பூங்கா அமையவுள்ளது. ஒரு ஏக்கரில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கோளரங்கம், ராக்கெட் மாதிரிகள் என மாணவர்களிடம் ஆர்வத்தை துாண்டும் அம்சங்கள் இடம்பெறவுள்ளன.மாநகராட்சி பட்ஜெட்டில், மாணவர்கள் எளிதாக கணிதம் கற்க ஏதுவாக, வ.உ.சி., பூங்கா வளாகத்தில் கணிதமேஜை ராமானுஜர் பெயரில், ராமானுஜம் கணிதப் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை, காம்பவுண்ட் சுவர், நிர்வாக அறை, பொது மக்கள் காத்திருக்கும் ஷெட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. அத்துடன், இயற்கணிதம், கணித வடிவங்கள், அடிப்படை கணிதம் சார்ந்த அம்சங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், கணிதப்பூங்கா அமைப்பதற்கான, பணி ஆணை வழங்கப்பட்டு விட்டது. ஆறு மாதங்களுக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!