சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில், தமிழக விண்வெளி விஞ்ஞானிகள் ஒன்பது பேருக்கு, நேற்று பாராட்டு விழா நடந்தது.
பெருமை
விழாவில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை; திருவனந்தபுரம் நீர் உந்து அமைப்பு மையத்தின் இயக்குனர் நாராயணன்; ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ராஜராஜன்; பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனர் சங்கரன்; மகேந்திரகிரி உந்துவிசை வளாக இயக்குனர் ஆசிர் பாக்கியராஜ்; சந்திரயான் - 2 திட்ட இயக்குனர் வனிதா; ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி; சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு, முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது:
ஆக., 23 இந்தியாவுக்கு மட்டுமல்ல... உலகத்துக்கே முக்கியமான நாள். நிலாவில் இந்தியா இறங்கிய நாள். நிலவை தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. தமிழகத்துக்கு பெருமை தேடித்தந்த அறிவியல் மேதைகளை வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன்.
ஒன்பது பேரில், ஆறு பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்து விஞ்ஞானிகளாக உயர்ந்தவர்கள். அதிலும் இருவர் பெண்கள். இந்த மேடையே சமூக நீதியின் அடையாளமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.
அறிவியல் மேதை
தமிழக இளைய சமுதாயத்தினர், இவர்களை தங்கள் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமையை ஏற்படுத்தி கொடுத்த, அறிவியல் மேதைகளான ஒன்பது பேருக்கும், தமிழக அரசு சார்பில், தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று, இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடரும், ஒன்பது மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில், கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அந்த மாணவர்கள், அறிவியலாளர்கள் தலைமையில் அமைக்கப்படும் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இந்த கல்வி உதவித் தொகைக்காக, 10 கோடி ரூபாயில், தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும். இவ்வாறு, முதல்வர் பேசினார்.
தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். உயர்கல்வித்துறை செயலர் கார்த்திக் நன்றி கூறினார்.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட் தயாரிக்க ஆய்வு
விழாவில், திருவனந்தபுரம் திரவ உந்து அமைப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நாராயணன் பேசியதாவது:
பிரதமர் மோடி, இந்திய அறிவியல் மற்றும் விண்வெளி வளர்ச்சிக்காக, பெரும் நிதியை ஒதுக்கீடு செய்து, இந்திய துணை கண்டம் வளர செயல்பட்டு வருகிறார். அதே போல் தமிழக முதல்வர் செயல்படுவதை பார்த்து பெருமிதம் அடைகிறோம். &'சந்திராயன் - 3&' வெற்றியால், பல பயன்களை அடைந்துள்ளோம். நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்பது பெருமை. நுாறாவது சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது, வளர்ந்த நாடாக இந்தியா மாற வித்திட்டது.
* வரும் காலத்தில் ஆட்களை பாதுகாப்பாக விண்ணுக்கு அனுப்பி, திருப்பி கொண்டு வரும் திட்டம் உள்ளது.
* &'எல்.வி.எம்- 3&' ராக்கெட் திறனை 4,000 கிலோவிலிருந்து, 25 சதவீதம் அதிகரிக்கும் திட்டம் உள்ளது.
* சக்திவாய்ந்த ராக்கெட் 9,000 கிலோ எடுத்துக் கொண்டு, 400 கி.மீ., செல்கிறது. இதை 19,000 கி.மீ.,ராக மாற்றும் சக்தி வாய்ந்த ராக்கெட் தயாரிக்க ஆரம்பித்துள்ளோம்.
* திரவ ஆக்சிஜன், மண்ணெண்ணெய், திரவ மீத்தேன் பயன்படுத்தி இயங்கும் உந்து விசைக் கருவிகளை உருவாக்கும் பணி நடக்கிறது.
* மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய, ராக்கெட்களை தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
* புதிய புதிய செயற்கைகோள்களை வடிவமைத்து தேச நலனுக்கு பயன்படுத்தும் திட்டம் உள்ளது.
தோல்வியைப் பார்த்து பயப்படக் கூடாது!
எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. புரிந்து படிப்பது முக்கியம். படிக்கும்போது சின்ன சின்ன &'புராஜக்ட்&' செய்யுங்கள். நிறைய சந்தர்ப்பம், வாய்ப்பு, தொழில்நுட்பம் உள்ளது. அதை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். தோல்வியை பார்த்து பயப்படக் கூடாது. தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு கடின உழைப்பு தேவை. இரண்டும் இருந்தால் வெற்றி நம்மை விட்டு எங்கும் போகாது. கல்லுாரியில் இருந்து வெளியில் வந்ததும், குழுவில் பணிபுரியும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த பணியில் இருந்தாலும், முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். எந்த துறையில் இருந்தாலும், அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.-வீரமுத்துவேல், சந்திரயான் - 3 திட்ட இயக்குனர்
சந்திரயான் - 2 திட்ட இயக்குனர் வனிதா: மாணவ, மாணவியர் எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ, அதில் நன்கு படித்து, அரசு தரும் உதவிகளை பயன்படுத்தி, நல்ல நிலைக்கு வர வேண்டும்.
ஆதித்யா எல் -1 திட்ட இயக்குனர் நிவார் ஷாஜி: ஆதித்யா எல் -1, சந்திரயான் - 3 கூட்டு முயற்சிக்கு சாட்சி. பல நுாறு தோழர்களின் உழைப்பு. உங்கள் ஆதரவு மேலும் மகத்தான திட்டங்களை நோக்கி பயணிக்க உதவும். மாணவர்களுக்கு நான் கூறும் அறிவுரை, முயற்சி திருவினையாக்கும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!