கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி விருது: 27ல் ஜனாதிபதி முர்மு வழங்குகிறார்
கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், கோவையில் குளங்களை புனரமைத்தது; மாடல் ரோடு உருவாக்கியதற்கு, மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டது. வரும், 27ல் நடக்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருது வழங்குகிறார். மத்திய அரசின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், கோவை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கு பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. திட்டப்பணிகள் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த நகரங்கள், சிறந்த திட்டப்பணிகள், செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்ட பணிகளுக்கு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் - ஸ்மார்ட் சிட்டி மிஷன் சார்பில் விருது வழங்கி, கவுரவிக்கப்படுகிறது. இவ்விருது பெற, நாடு முழுவதிலும் இருந்து, 52 நகரங்களில் இருந்து, 88 முன்மொழிவுகள் சென்றிருந்தன. கோவையில் குளங்களை புனரமைத்தது; ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு மற்றும் ரேஸ்கோர்ஸில் மாடல் ரோடு உருவாக்கியதற்காக, பில்ட் என்விரான்மென்ட் என்ற பெயரில், மாநகராட்சிக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதேபோல், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்தும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நடந்த போட்டியில், தேசிய அளவில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. இவ்விருது வழங்கும் விழா, மத்தியப் பிரதேசம் இந்துாரில் வரும், 27ல் (புதன்கிழமை) நடைபெற உள்ளது; ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருது வழங்குகிறார். மாநகராட்சி சார்பில், கமிஷனர் பிரதாப் பங்கேற்று, அவ்விருதை பெறுகிறார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!