சாய தொழில் நுட்பம் மேம்படுத்த மையம்
திருப்பூர்: சாயமிடும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில், தொழிற்பயிற்சி மையம் திறக்க, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது. திருப்பூர் சுற்றுப்பகுதியில், 300க்கும் அதிகமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. மத்திய, மாநில அரசு மானிய உதவியுடன், பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. சாய ஆலைகளில், சாயமிடுவதில் பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தரமாக சாயமிடுவதற்காக உப்பும் பயன்படுத்தப்படுகிறது. சாயம், ரசாயனம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டியிருப்பதால், தொழில்நுட்ப பயிற்சி பெற்ற நபர்கள் மட்டுமே, அப்பணிகளை செய்ய முடிகிறது. இதேபோல், சுத்திகரிப்பு நிலையத்தில், ஒவ்வொரு பிரிவிலும், தொழில்நுட்ப அனுபவம் வாய்ந்த நபர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். மற்ற தொழில்களை போல், சாய ஆலைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர். புதிய பணியாளர், திடீரென பணியில் சேர்ந்து, அனைத்து பணிகளையும் செய்ய முடியாது. நீண்ட நாள் பணி செய்தால் மட்டுமே, தெரிந்துகொள்ள முடியும். அதற்காக, பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுவரை, அதற்கான பயிற்சி மையம் திருப்பூரில் இல்லை. இந்நிலையில், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்துடன் (சிட்ரா) இணைந்து, திருப்பூரிலேயே சாயமிடும் தொழில்நுட்பம் குறித்த தொழிற்பயிற்சி மையம் அமைக்க, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சிட்ராவின் தர பரிசோதனை கூடமும், சங்க வளாகத்தில் இயங்கி வருகிறது. சங்க நிர்வாகிகள் கூறுகையில், திருப்பூரில் சாயமிடும் தொழில்நுட்பம் தொடர்பான தொழிற்பயிற்சி மையம் இல்லை. பல்வேறு குளறுபடிகளை உடனுக்குடன் தீர்க்கவும், தரமான சாயமிடலை தொடரவும் வசதியாக, பயிற்சி மையம் திறக்க முடிவு செய்துள்ளோம். சிட்ராவுடன் இணைந்து, தொழிற்பயிற்சி மையம் திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!