வேளாண் கல்லூரி அமைக்க வலியுறுத்தி த.வா.க., மனு
பவானி: பவானி தொகுதியில், வேளாண் கல்லுாரி அமைக்க கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கோரிக்கை மனு வழங்கினர்.தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், ஈரோட்டில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரிடம் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மனு வழங்கினர்.அதில், பவானி மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் வேளாண் கல்லுாரி இல்லாததால், வெளி மாவட்டங்களுக்கு சென்று மாணவ, மாணவியர் படிக்க வேண்டிய நிலை உள்ளது. பல பெற்றோர்கள் வெளியூர்களில் படிக்க வைக்க விரும்புவதில்லை. எனவே, பவானி மற்றும் அந்தியூர் சட்டசபை தொகுதி மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பவானி தொகுதியில் வேளாண் கல்லுாரி, வேளாண் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க, முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்த வேண்டும். இதற்கான இடத்தை குறிச்சி மலைப் பகுதியில் கையப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.அப்போது, மாநில ஊடகப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், மேற்கு மாவட்ட தலைவர் கைலாசம், பொருளாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!