சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், எண்ணித் துணிக என்ற தலைப்பில், தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கவர்னர் ரவி பங்கேற்று, மொழி பெயர்ப்பாளர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் என, 42 பேருக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.மயிலை திருவள்ளுவர் சங்கம் சார்பில், கவர்னர் ரவிக்கு, அறிவு களஞ்சியம் 2023 என்ற விருது வழங்கப்பட்டது. தேவாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சச்சிதானந்தம், மயிலை திருவள்ளுவர் சங்க தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் உட்பட பலரும் பங்கேற்றனர்.கவர்னர் ரவி பேசியதாவது:தமிழகத்திற்கு வருவதற்கு முன், தமிழில் உள்ள இலக்கியங்கள் குறித்து தெரியாமல் இருந்தது. ஆங்கிலத்தில் திருக்குறள் படித்த நேரத்தில் அதன் மீது பெரிய அளவில் காதல் இருந்தது, ஐந்து வயதில் என் தந்தை பகவத் கீதையை படிக்க கொடுத்தார்.இன்று வரை என் வாழ்க்கையை வழி நடத்தும் புத்தகமாக உள்ளது. திருக்குறள் படித்து முடித்த பின், தற்போது பகவத் கீதை மற்றும் திருக்குறள் என, இரண்டு புத்தகங்கள் என் வாழ்க்கையை வழி நடத்தும் புத்தகமாக உள்ளன.தமிழ் இலக்கியங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் நேரத்தில் தான், இவை எவ்வளவு பெரிய பொக்கிஷங்கள் என்று தெரிந்து கொண்டேன். மொழி தான் மக்களின் ஆன்மாவாக உள்ளது. மக்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை விளக்குகிறது.தமிழ் மொழிக்கு சற்று இணையாக உள்ள ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே, வேறு மொழிகள் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மொழியில் வந்த அனைத்து நுால்களிலும், உலகத்திற்கான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்பவர்கள், திருவள்ளுவர் போல அதனை மிக சுருக்கமாக மொழி பெயர்ப்பு செய்யாதீர்கள். விளக்கமாக மொழி பெயர்ப்பு செய்யுங்கள்.நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த மொழியின் சிறப்பு குறித்து எடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் அனைவரும் இந்த மொழியில் உள்ள செல்வத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!